நமக்கேற்ற நாட்டுக்கோழி வளர்ப்பு..! அதிக லாபம் தரும் சிறு தொழில்

0
1311

நாட்டுக்கோழி வளர்ப்பு – பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள்.

இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம்.

தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

முட்டையை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.

சிறு தொழில் – நாட்டுக்கோழி பராமரிக்கும் முறை:

நாட்டுக்கோழி வளர்ப்பு பொறுத்தவரை பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது.

செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது.

பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.

முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.

48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம்.

எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம்.

45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

சிறு தொழில் – நாட்டு கோழியின் வகைகள்:

கொண்டைக் கோழி, கழுகுக் கோழி, சண்டைக் கோழி, குருவுக் கோழி, கருங்கால் கோழி ஆகிய கோழி வகைகளை தனித்தனியே அடையாளம் காண முடியாது போனாலும் அதன் வண்ணங்களை வைத்து அடையாளம் காண முடியும்.

சிறு தொழில் இனப்பெருக்கம்:

நாட்டுக்கோழி வளர்ப்பு பொறுத்தவரை நன்கு வளர்ந்த கோழிகள் 25 முதல் 30 வார வயதில் முட்டையிட தொடங்கும். நல்ல தீவனம் கிடைத்தால் 20 வாரத்திலேயே முட்டையிடும்.

ஆண் சேவல் 20 வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்த கொண்டையுடன் இருக்கும். அதிகாலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்திக்கு தயாரானது என அறிந்து கொள்ளலாம்.

நாட்டுக்கோழி அடை காக்கும் முறை:

நாட்டுக் கோழிகளை முட்டைகளின் மேல் அமர வைத்து அடை காக்க வைக்க வேண்டும்.

ஓர் நல்ல கூடையில் பாதியளவு உலர்ந்த தவிடு, மரத்தூள், வைக்கோல், கூளம் இவற்றில் ஏதாவது ஒன்றை நிரப்பி நடுவில் சிறிதளவு குழி போல் செய்து கொள்ள வேண்டும். அதன்மேல் சேகரித்த முட்டைகளை வைக்க வேண்டும்.

அதிகபட்சமாக 15 முட்டைகள் வரை வைக்கலாம். இந்த கூடைக்குள் கோழி அமர்ந்து அடைகாக்கும். அந்த நேரத்தில் நாம் அதை நெருங்கினால் எச்சரிக்கை சப்தம் செய்யும்.

கோழி குஞ்சு பொரிக்கும் காலம் 21 நாள்கள் ஆகும்.

நாட்டு கோழி வளர்க்க முதலீடு:

நாட்டுக்கோழி வளர்ப்பு பொறுத்தவரை ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500/-, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.

நாட்டுக்கோழி தொழில் வருமானம்:

நாட்டுக்கோழி வளர்ப்பு வளர்ப்பு பொறுத்த வரை ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம்.

ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

நாட்டு கோழியின் சந்தை வாய்ப்பு:

இறைச்சி பிரியர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து கோழிகளை வாங்கி செல்வார்கள் வீட்டு தேவைகளுக்கும், விசேஷங்களுக்கும் மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை, அதிக லாபம் பெற வேண்டும் என்றால் இந்த தொழிலில் கண்ணை மூடிக்கொண்டு தயங்காமல் இறங்கலாம்.

நாட்டுக்கோழி வளர்ப்பு – முக்கிய குறிப்பு:

கோழிக் குஞ்சுகள் வாங்கும்போது, அவற்றின் விலையை மட்டும் பார்க்காமல், தரமான குஞ்சுகளா என்று பார்த்து வாங்க வேண்டும். குஞ்சுகளை வாங்கும்போதே அவை எந்த மாதத்தில் விற்பனைக்கு வரும் என்பதை கணக்கிட வேண்டும்.

புரட்டாசி, கார்த்திகை, மார்கழி, தை போன்ற மாதங்களில் கோழி விற்பனை டல் அடிக்கும். அது விரத காலம். அதேபோல் ஆடி, ஐப்பசி, பங்குனி, சித்திரையில் கோழி விற்பனை அமோகமாக இருக்கும். ஏனெனில், அது அசைவ காலம்.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here