மாத சம்பளத்தை விட்டுத்தள்ளுங்க.. முதலாளியாக துடிப்போருக்கு சூப்பரான 20 பிஸ்னஸ் ஐடியா..!

0
1803

சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாகும். குறைந்த முதலீட்டில் அதிகமான இலாபம் ஈட்டக்கூடிய வகையிலான தொழில்கள் குறித்த ஐடியாக்கள் கிடைத்தால் “ககக..போ” என்கின்ற பாணியில் கருத்துக்களைக் கச்சிதமாய்க் கவர்ந்து போக நீங்க தயாரா? இதோ ஐடியாக்களை அள்ளித் தெளிக்க நாங்க தயார். நம்முடைய வீட்டில் அல்லது வாடகைக் கட்டடத்தில் சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களைத் தொடங்கலாம். மிகக் குறைந்த முதலீட்டில் உற்பத்திக்கான சாதனங்கள் அல்லது இயந்திரங்களை வாங்கிக் கொள்ளலாம். இயந்திரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உற்பத்திக்கான முதலீட்டைக் குறைத்துக் கொள்ளலாம். குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய இருபது வகையான உற்பத்தித் தொழில்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களுக்கான ஐடியாக்கள்

பேப்பர் தயாரித்தல் பேப்பர் தயாரிக்கும் தொழிலைக் குறைந்த அளவிலான முதலீட்டில் செய்ய இயலும். பேப்பருக்கான தேவையும் அதற்கான சந்தையிடல் வாய்ப்பும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. கல்வித் துறை மற்றும் பிற தொழில் துறைகளில் பேப்பருக்கான தேவைகள் அதிகரித்துக் கொண்டுள்ளன. அதனால் பேப்பர் தயாரிக்கும் தொழிலில் வெற்றிக்கான வாய்ப்புகளும் இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். பேப்பர் தயாரிப்பதற்கு முன்பு, அதனுடைய அளவு மற்றும் தேவையைச் சரியாக நிர்ணயம் செய்து கொள்வது முக்கியம். அதற்கேற்றார் போலப் பொருத்தமான இயந்திரங்கள், பிற உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உற்பத்தி செய்வதற்கான இடம் ஆகியவற்றைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். தேவைப்படும் முதலீடு : ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்ச ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : பேப்பர் தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருட்கள், தேவையான வேதிப் பொருட்கள்.

ஃபைல்கள் மற்றும் கவர்கள் தயாரிப்பு ஃபைல் மற்றும் பேப்பர் கவர்கள் தயாரிப்பதும் உற்பத்தி சார்ந்த எளிமையான சிறந்த சிறுதொழிலாக உள்ளது. கல்வி நிலையங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் ஃபைல்கள் மற்றும் பேப்பர் கவர்களுக்கான தேவை அதிகம். ஃபைல்கள் மற்றும் கவர்கள் தயாரிப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. முதலாவது முறை, கைகளால் தயாரித்தல், இரண்டாவது வகை, இயந்திரங்களைக் கொண்டு தயாரித்தல். நம்முடைய சூழலுக்கு ஏற்ப ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றலாம். இயந்திரங்கள் மூலம் தயாரிப்பது நலம் பயக்கும். தேவையான முதலீடு : தோராயமாக ஒரு இலட்சம் ரூபாய். தேவைப்படும் பொருட்கள் : உற்பத்தி இயந்திரம், பேப்பர் உள்ளிட மூலப்பொருட்கள்.

சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் தயாரிப்பு சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் எப்பொழுதும் நிலையான விற்பனையையும், சந்தைக்கான தேவையையும் கொண்டவை. எனவே, சோப்பு மற்றும் சலவைப் பொருட்கள் உற்பத்தியில் தயக்கமின்றி ஈடுபடலாம். இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால், தயாரிப்பு முறைகளைப் பற்றிக் கற்றுக் கொள்வது அவசியம். வேதிப் பொருட்களையும், மூலப் பொருட்களையும் மிகச் சரியான விகிதத்தில் கலக்கத் தெரிந்தால் மட்டுமே நாம் விரும்புகின்ற வகையில் உற்பத்திப் பொருட்களைப் பெற முடியும். வீட்டிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி உற்பத்தியைத் தொடங்கலாம் அல்லது இதற்கெனத் தனியான ஒரு இடத்தைத் தேர்வு செய்து உற்பத்தியைத் தொடங்கலாம். தேவையான முதலீடு : சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : தயாரிப்புக்கான வேதிப் பொருட்கள், பாத்திரங்கள், கரண்டிகள், பிளாஷ்டிக் பைகள், எரிவாயு அல்லது மின் அடுப்பு, கையுறைகள், தராசுகள். எண்ணைய் தயாரிப்பு எண்ணெய் (ஹேர் ஆயில்) தயாரிப்பதும் மிகச் சிறந்த சிறு உற்பத்தித் தொழிலாகும்.

குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே உற்பத்தியைத் தொடங்கலாம். அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்பதால் இதற்கான தேவையும் விற்பனையும் அதிகம். நாம் தயாரிக்கும் எண்ணெய் பிசுபிசுப்பற்றதாகவும் நல்ல வாசனை கொண்டதாகவும் இருக்க வேண்டும். முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தகுந்த கூட்டுப் பொருள்களோடு எண்ணெய் தயாரிப்பது நம்முடைய விற்பனையை அதிகப்படுத்தும். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவைப்படும் பொருட்கள் : எண்ணெய், மூலிகைப் பொருட்கள், வாசனைப் பொருள், பாட்டில்கள் மற்றும் கலைவை இயந்திரம். விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பையும் சிறிய முதலீட்டில் செய்ய முடியும்.

அதிகம்பேர் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களோடு தொடர்புடைய பொருட்களின் தயாரிப்பில் ஈடுபடலாம். பந்து, பேட், பேட்மிண்டன் ராக்கெட், கேரம் போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கலாம். வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் இது போன்ற விளையாட்டுக்களை விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இத்தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம். தேவையான முதலீடு : சுமார் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை தேவைப்படும் பொருட்கள் : மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள்

பிஸ்கட் தயாரிப்பு வீட்டிலிருந்தபடியே ஏதாவது ஒரு தொழில் செய்ய நினைப்பவர்களுக்குப் பிஸ்கட் தயாரிப்புத் தொழில் சிறந்ததாகும். இது ஒரு இலாபகரமான சிறு தொழிலாகும். பல முன்னணி நிறுவனங்கள் பிஸ்கட் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், வீட்டில் தயாரிக்கப்படும் பிஸ்கட் வகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆரோக்கியமானதாகவும் நல்ல சுவை மிக்கதாகவும் பிஸ்கட் தயாரிக்கத் தெரிந்திருந்தால் இத்தொழிலை வெற்றிகரமாகச் செய்யலாம். பிஸ்கட் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது நமக்குத் துணை செய்யும். தேவைப்படும் முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவைப்படும் பொருட்கள் : கோதுமை மாவு, சர்க்கரை, பொடிப்பதற்கும் அரைப்பதற்கும் தேவையான கிரைணடர், மிக்சி போன்ற இயந்திரங்கள்

மெழுகுவர்த்தித் தயாரிப்பு மெழுகுவர்த்தித் தயாரிப்பு என்பது, பெரும்பாலானோர் ஈடுபடும் சிறு உற்பத்தித் தொழில் ஆகும். மிக வித்தியாசமான வடிவமைப்புடனும், நல்ல வாசனையுடனும் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளுக்கு வரவேற்பும் தேவையும் அதிகம். மிகக் குறைந்த முதலீட்டில் இத்தொழிலைத் தொடங்க முடியும். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 வரை தேவையான பொருட்கள் : மெழுகு, வடிவமைப்பு அச்சுகள், வாசனைப் பொருட்கள், சூடான மெழுகினைத் தாங்குவதற்கான உபகரணங்கள்

பந்துமுனைப் பேனா மைக்குழாய் (Ball point Pen Refill) தயாரிப்பு பேனாக்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, பந்துமுனை மைக்குழாய் (Refill) தயாரிக்கும் தொழிலை வீட்டிலிருந்தே செய்யமுடியும். கல்வி மற்றும் தொழில் சார்ந்ந சூழலில் பேனாக்களுக்கான பயன்பாடு அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே, பந்துமுனை மைக்குழாய் தயாரிக்கும் தொழில் இலாபம் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தேவையான முதலீடு : சுமார் 50,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : மை நிரப்பும் இயந்திரம், பந்துமுனையைப் பொருத்தும் இயந்திரம், துளையிடும் கருவி, வெப்பமூட்டும் இயந்திரம்

தேன் தயாரிப்பு தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ வளர்ப்புப் பண்ணை மூலமாகத் தேன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம். குறைந்த முதலீட்டில் தொடங்கக் கூடிய தொழில்களுள் தேன் தயாரிப்புத் தொழிலும் ஒன்று. தேன், மருந்தாகவும், ஊட்டச்சத்து மிக்க உணவாகவும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படுகிறது. பொழுதுபோக்காகத் தேனீ வளர்ப்பவர்கள் கூட அதனை வருமானத்திற்குரிய தொழிலாக மாற்றிக் கொள்ளலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : தேன்வளர்ப்புப் பெட்டிகள், தேன் கூடுகள், சேகரித்துப் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள்.

ஜாம் மற்றும் ஜெல்லி தயாரித்தல் பல்வேறு வகையிலான பழங்களைக் கொண்டு ஜாம் மற்றும் ஜெல்லி தயாரித்தல் வீட்டிலேயே செய்யக்கூடிய சிறு உற்பத்தித் தொழிலாகும். கேக் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்கு ஜாம் மற்றும் ஜெல்லி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. வீடு மற்றும் உணவகங்களில் இவற்றுக்கான தேவையும் பயன்பாடும் அதிகம். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் உணவு வகைகளுள் இவற்றுக்கு முதலிடம் உண்டு. எனவே தயங்காமல் ஜாம் மற்றும் ஜெல்லி தயாரிப்புத் தொழிலில் ஈடுபடலாம். தேவைப்படும் முதலீடு : சுமார் 25,000 முதல் 50,000 ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : பழங்கள், சர்க்கரை, சிட்ரிக் அமிலம், பதப்படுத்துவதற்குத் தேவையான பொருட்கள், நிறம் சேர்க்கும் பொருட்கள், வேதிப்பொருட்கள், பாட்டில்கள். பொம்மைகள் தயாரிப்பு பொம்மைகள் மீது குழந்தைகளுக்கு என்றுமே ஆர்வம் அதிகம்.

பொம்மைகளுடன் விளையாடுவது அவர்களுக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. இதன் காரணமாகவே பொம்மைகளின் விற்பனை எப்பொழுதும் சரிவைச் சந்திக்காமல் ஏற்றத்துடனேயே இருக்கும். எனவே. தொழில் தொடங்கவேண்டும் என்னும் ஆர்வம் உடையவர்கள் தாராளமாகப் பொம்மைகள் தயாரிப்புத் தொழிலில் இறங்கலாம். சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் ஈடுபடுவதற்கேற்ப பொம்மைத் தயாரிப்புத் தொழில் சந்தை வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தேவைப்படும் முதலீடு : தோராயமாக ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை தேவைப்படும் பொருட்கள் : மூலப் பொருட்கள், அச்சு வடிவங்கள், பிளாஷ்டிக் அச்சு வார்ப்பு இயந்திரங்கள்.

பிளாஷ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு உணவு வகைகள், குளிர்பானங்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய பேக்கிங் வசதிக்காகப் பிளாஷ்டிக் பாட்டில்களையே சார்ந்திருக்கின்றன. கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களுள் பெரும்பாலானவை பிளாஷ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். எனவே, பிளாஷ்டிக் பாட்டில்களுக்கான தேவையும் சந்தையும் மிகப் பரந்து விரிந்திருப்பதை அறியலாம். ஓரளவுக்கு முதலீடு செய்கின்ற திறன் இருந்தால் இத்தொழிலில் துணிந்து இறங்கலாம். தேவைப்படும் முதலீடு : சுமார் ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை. தேவைப்படும் பொருட்கள் : மூலப் பொருட்கள், அச்சு வடிவங்கள், பிளாஷ்டிக் அச்சு வார்ப்பு இயந்திரங்கள்.

உரம் தயாரித்தல் வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டுள்ள நம்முடைய நாட்டில் உரத்திற்கான தேவை என்றும் குறைவதில்லை. விவசாயத்திற்குத் தேவையான உரங்களைத் தயாரிக்கும் தொழிலை முதலில் சிறிய அளவில் மேற்கொள்ளலாம். சந்தையின் போக்கினையும் தேவையையும் சரியாக அறிந்து கொண்ட பின்பு இத்தொழிலை விரிவு செய்து வெற்றிக்கொடி நாட்டலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மூலப்பொருட்கள், வேதிப் பொருட்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள். ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு ஆட்டோமொபைல் தொழில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது.

ஆட்டோமெபைல்களுக்கான உதிரிப் பாகங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஆர்வமும், திறனும், முதலீடு செய்வதற்கு ஏற்றப் பொருளாதார வசதியும் இருந்தால் நீங்கள் தாராளமாக ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்புத் தொழிலில் இறங்கலாம். ஆட்டோமொபைலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயமில்லை. எந்தப் பாகங்களுக்கு எப்பொழுதுமே அதிகமான தேவை உள்ளது என்பதைக் கண்டறிந்து அப்பாகங்களை உற்பத்தி செய்யலாம். தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மூலப் பொருட்கள், பாகங்களுக்கு ஏற்ற வடிவ அச்சுகள், தயாரிப்பு இயந்திரங்கள். எழுது பொருட்கள் தயாரிப்பு பென்சில்கள், வண்ணங்கள், பேனா, அழிப்பான் (eraser), கூராக்கி (Sharpner), பின்னழுத்தி (Stapler), ஒட்டும் பசை, அளவுகோல்கள் (Rulers), நோட்டுகள் போன்றவை எக்காலத்திற்கும் அனைவருக்கும் தேவையான பொருட்களாக இருக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளையும் தாண்டி அனைத்துத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் இப்பொருட்கள் அவசியமாகத் திகழ்கின்றன. சந்தைக்கான தேவை என்கின்ற வகையில், எழுது பொருட்கள் உற்பத்திக்கு என்றைக்குமே வீழ்ச்சி இல்லை. தேவையான முதலீடு : சுமார் ஒரு இலட்சம் ரூபாய் முதல் இரண்டு இலட்ச ரூபாய் வரை. தேவையான பொருட்கள் : நாம் உற்பத்தி செய்யும் பொருளுக்கு ஏற்ப மூலப்பொருட்களும் பிற உபகரணங்களும் தேவைப்படும். கண் கண்ணாடி மற்றும் பிரேம்கள் தயாரிப்பு கண் கண்ணாடி அல்லது பிரேம்கள் தயாரிப்புத் தொழிலும் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. கண் கண்ணாடி மற்றும் பிரேம்கள் விற்பனைக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. நல்ல வடிவமைப்புத் திறனும், முதலீடு செய்வதற்கேற்ற பொருளாதார வசதியும் இருந்தால் இத்தொழிலில் சாதிக்கலாம். ஏற்கனவே இத்தொழிலில் கால்பதித்துள்ள பெரும் நிறுவனங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை தேவைப்படும் பொருட்கள் : அச்சு வெட்டுக் கருவி, உலோகம் மற்றும் பிளாஷ்டிக், கண்ணாடி மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் வாட்டர் ஃபில்டர் இயந்திரங்கள் தயாரிப்பு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் தண்ணீரை வடிகட்டித் துய்மைப்படுத்தி அருந்துகின்ற பழக்கம் பரவி விட்டது. இதற்காகத் தங்களது வீடுகளில் வெவ்வேறு வகையான வாட்டர் ஃபில்டர் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். எனவே வாட்டர் ஃபில்டர்களுக்கான விற்பனை வாய்ப்புகள் அதிகம்.

அதிக அளவிலான நிதியிருந்தால் இத்தொழிலில் ஈடுபடலாம். தேவையான முதலீடு : சுமார் 5 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை

அறைகலன்கள் (Furniture) தயாரிப்பு வீடு, அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களுக்கும் அறைகலன்கள் தேவையாக உள்ளன. நாற்காலி, கட்டில், மேஜை, மெத்தை, கப்போர்ட், அலமாரிகள், தடுப்பறைகள் (Cabins) போன்று அறைகளுக்குத் தேவையான பொருட்கள் தயாரிப்புக்கு நல்ல விற்பனைச் சந்தையும் தேவையும் உள்ளது. எனவே தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக ஃபர்னிச்சர் தயாரிப்புத் தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். தேவையான முதலீடு : ஒரு இலட்சம் ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரை தேவையான பொருட்கள் : மரம், இயந்திரங்கள், பிற மூலப்பொருட்கள் ஆடை தயாரிப்பு ஆடை தயாரிப்பு என்பது வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சிறு உற்பத்தித் தொழிலாகும். ஆடை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் தனித்திறன் இருந்தால் மட்டுமே இத்தொழிலில் வெற்றியடைய முடியும். இத்தொழிலின் தொடக்கக் காலத்தில், தொழிற்சாலை மற்றும் பள்ளிகளுக்கான சீருடைகள் தயாரிப்புப் பணியில் ஈடுபடலாம். பிறகு நம்முடைய தொழிலை பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தலாம். தேவையான முதலீடு : சுமார் 25,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை. தோல் பொருட்கள் தயாரிப்பு தோலால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதும் மதிப்பும் தேவையும் உண்டு.

சந்தைக்கான வாய்ப்புகளை நோக்கும்பொழுது, தயக்கமில்லாமல் தொடங்கப்படக் கூடிய தொழில்களுள் தோல் சார்ந்த பொருட்களின் உற்பத்தித் தொழிலும் ஒன்றாக இருக்கிறது. இத்தொழிலைத் தொடங்குவதற்கு முன்னால், இடம், சந்தை வாய்ப்பு, தொழில் திறன் ஆகியன குறித்து முறையான ஆய்வு மேற்கொள்வது நலம். தேவையான முதலீடு : சுமார் ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை. தவறாமல் பின்பற்ற வேண்டும் மேற்கண்ட அனைத்துத் தொழில்களுக்கும் முறையான பதிவு மற்றும் தொழில் தொடங்குவதற்குரிய சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. உற்பத்தித் தொழில் உற்பத்தித் தொழிலில் ஈடுபட நினைப்பது வரவேற்புக்குரிய செயல். சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு, நேர்மையான வணிகம், தேவையான முதலீடு ஆகியவை இருந்தால் தொழிலில் சாதனைகளை நிகழ்த்த முடியும். உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முன்னால் பல்வேறு வகையான விசயங்கள் குறித்துத் தீர ஆராய்ந்து கொள்ளவேண்டும்.

20 சிறு உற்பத்தி தொழில் இதுவரை குறிப்பிட்ட இருபது வகையான சிறு உற்பத்தித் தொழில்கள் குறித்த கருத்துக்கள், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவிக்கரமாக இருக்கும் என நம்புகிறோம். உங்களுடைய விருப்பம், தனித்திறன், முன் அனுபவம், முதலீட்டுத் திறன், தொழில் சார்ந்த அறிவு ஆகியவற்றுக்கு ஏற்ப இவற்றுள் எதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here