NEEDS SCHEME – புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ( NEEDS SCHEME )

0
1321

புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ( NEEDS SCHEME )

படித்த பட்டம், பட்டயம் மற்றும் ஐ.டி.ஐ அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை மானியத்துடன் கடன் பெற்று தொழில் துவங்கும் திட்டம்.

  • இத்திட்டம் நமது தமிழக முதலமைச்சரின் கனவு திட்டமாகும்.
  • வருடந்தோறும் 1000 முதல் தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டம்.
  • இத்திட்டம் 50% பெண் தொழில்முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • இத்திட்டம் லாபகரமான உற்பத்தி துறை மற்றும் சேவை தொழில்களுக்கான திட்டம். இத்திட்டம் புதிய தொழில்முனைவோர்களுக்கான திட்டம்.
  • இதில் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பில் 25% மானியமாக வழங்கப்படும். மொத்த மானியம் ரூ.25 லட்சம் மிகாமல் இருக்கும்.

கடன் பெற தகுதியான வயது வரம்பு:

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதி அன்று 21 வயது முடிவடைந்தவராகவும், பொதுப்பிரிவினரைச் சார்ந்தவராக இருப்பின் 35 வயதிற்கு மிகாதவராகவும், சிறப்பு பிரிவை சார்ந்தவராக இருப்பின் 45 வயதிற்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சிறப்பு பிரிவு தொழில்முனைவோர் என்றால் யார்?

மகளிர் / ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பிற்பட்ட வகுப்பினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சிறுபான்மையினர் / முன்னால் ராணுவத்தினர் / திருநங்கையர் / மாற்று திறனாளிகள்.

 கடன் பெற தேவையான கல்வித் தகுதி:

பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, ITI / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி.

வசிப்பிடம்:

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.

தகுதியுள்ள தொழில்கள்:

இலாபகரமாக செயல்படுத்தத் தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள்.

திட்ட மதிப்பீடு:

திட்ட மதிப்பீடு ரூ.5.00 லட்சத்திற்கு மேல் ரூ.1.00 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொழில்முனைவோர் நிலம் வாடகை/குத்தகையில் இயங்கி வரும் கட்டிடத்தின் மதிப்பு/தொழில்நுட்ப ஆலோசனைக்கான செலவு, நடைமுறை மூலதனத்திற்கான விளிம்புத் தொகை மற்றும் ஆரம்ப கட்ட செலவினங்கள் இவை அனைத்தையும் தமது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும்.

நிலத்தின் மதிப்பு கடன் விண்ணப்பம் சமர்பிக்கும் தேதியில் அரசு நிர்ணயம் செய்த மதிப்போ (அ) சந்தை மதிப்போ இதில் எது குறைவாக உள்ளதோ அதை திட்ட மதிப்பில் சேர்த்து கொள்ளலாம்.

தொழில்முனைவோரின் முதலீடு:

பொதுப் பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10%

சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5%

அரசு வழங்கும் மானிய உதவி:

திட்ட மதிப்பீட்டில் 25% அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை.

 மானிய உதவி பெற தகுதியுடைய முதலீடுகள்:

விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரில் புதிதாக வாங்கப்படும் நிலத்தின் மதிப்பு, புதிதாக வாங்கப்படவுள்ள/ கட்டப்படவுள்ள தொழிற்கூடம் மற்றும் புதிதாக வாங்கப்படவுள்ள இயந்திரங்கள் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களின் மதிப்பு.

மானிய உதவி பெற தகுதியில்லாத முதலீடுகள்:

வாடகை/குத்தகையில் இயங்கி வரும் தொழிற்கூட கட்டிடத்தின் மதிப்பு/ தொழில்நுட்ப ஆலோசனைக்கான செலவு, நடைமுறை மூலதனத்திற்கான விளிம்புத் தொகை மற்றும் ஆரம்ப கட்ட செலவினங்கள் பழைய இயந்திரங்கள் (தொழில்முனைவோரால் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட பழைய இயந்திரங்கள் தவிர)

தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி:

கடனுதவி பெற தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் ஒரு மாத தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமாக பெற வேண்டும்.

பங்குதாரர் நிறுவனங்களின் தகுதி:

ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர் நிறுவனங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி பெறலாம். அவ்வாறு உதவி பெற அனைத்துத் தொழில் முனைவோரும் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற அ=தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். எனினும் இதர பங்குதாரர்களுடைய சம்மதத்துடன் ஒரு பங்குதாரருக்கு மட்டுமே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

தகுதி பெறா விண்ணப்பதாரர்கள்:

  • மத்திய மற்றும் மாநில அரசு மூலம் செயல் படுத்தப்பட்டுவரும் PMRY, REGP, PMEGP, UYEGP, TAHDCO போன்ற நிதியுதவி திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்கள்.
  • சுய உதவிக்குழு/ இதர குழும திட்டங்கள் மூலம் பொருளாதார செயல்பாடுகளுக்காக கடன் பெற்றவர்.
  • வங்கிகள்/ தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் ஏற்கனவே கடனுதவி பெற்று கடனை திருப்பிக்கட்ட தவறியவர்கள்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:

விண்ணப்பம் இரண்டு நகல்களில் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சமர்பிக்கப்பட வேண்டும்.

  • வயதிற்கான அத்தாட்சி/ ஆதாரம் பிறப்பு சான்றிதழின் நகல் அல்லது பள்ளி மற்றும் கல்லூரி மாற்று சான்றிதல்.
  • இருப்பிட அத்தாட்சி – குடும்ப அட்டை நகல் அல்லது வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்று.
  • பட்ட / பட்டயப் படிப்பு / அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழில் பயிற்சி சான்றிதழின் நகல்.
  • சாதிச் சான்றிதல்
  • முன்னால் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள், திருநங்கையர் ஆக இருப்பின் அதற்குரிய சான்றிதல்.
  • திட்ட அறிக்கை மற்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கான உத்தேச விற்பனை மற்றும் பணப்பாய்வு அறிக்கை.
  • திட்ட மதிப்பீட்டில் நிலத்தின் மதிப்பு சேர்க்கப் பட்டிருந்தால் நிலப்பட்டாவின் நகல்.
  • பட்டய கட்டுமான பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டிடத்திற்கான உத்தேச மதிப்பீடு.
  • இயந்திரங்கள் அல்லது கருவிகளின் விலைப்பட்டியல் அசல் மற்றும் நகல்.
  • சான்றுறுதி அலுவலரிடமிருந்து ரூ.20 மதிப்பிலான முத்திரை தாளில் பெறப்பட்ட உறுதி மொழி பத்திரம்.
  • பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் கூட்டு ஒப்பந்த பத்திரத்தின் நகல்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம்.

கீழ்க்கண்ட தளத்தில் இத்திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்.

http://www.msmeonline.tn.gov.in/needs/

 தேர்வு செய்யும் முறை:

தகுதி பெரும் தொழில்முனைவோர் மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கும் மாவட்ட தெரிவுக்குழு மூலமாக நடைபெறும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்து பின் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யபடும் .

நேரடியாக வங்கியை அணுகி அவர்கள் ஒப்புதலுடன் வரும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வுக்குழு மூலம் விரைவாக அந்த வங்கிக்கு அனுப்ப படும்.

கடன் பெரும் வங்கியின் பெயர், முகவரி மற்றும் பதிவு எண் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

வங்கி மேலாளரின் முன் அனுமதி பெற்ற பின் விண்ணபிப்பது சரியானது

மேற்கண்ட திட்டத்தில் கடன் பெற விரும்புவோர் வங்கி மேலாளரை மதியம் 3 மணிக்கு மேல் முன் அனுமதி பெற்று சந்திப்பது நன்று. உடன்  அனைத்து ஆவணங்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

இதில் வங்கி மேலாளரின் முடிவு இறுதியானது.

திட்ட அறிக்கை என்றால் என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு 5 வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

கயிறு தொழில் முனைவோர் திட்டம் (காயர் உத்யமி யோஜனா) 

COIR UDYAMI YOJANA

10 லட்சம் வரை கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்: பயனாளியின் பங்கு 5%, மானியம் 40%, வங்கி கடன் 55%. சொத்து பிணையம் தேவையில்லை.

கயிறு தொழில் அதிக தொழிலாளர்களை கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான  விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. கயிறு தொழிலில் கேரளா மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழகம் உள்ளது. ஆனாலும் பழுப்பு நிற நார் உற்பத்தியில் நாட்டிலேயே  தமிழகம் முதன் இடத்தில் உள்ளது.

மத்திய அரசின் கயிறு வாரியம் (COIR BOARD) கயிறு தொழிலின் மேம்பாட்டிற்கு, ‘காயர் உத்யமி யோஜனா’ (COIR UDYAMI YOJANA) என்ற கயிறு தொழில் முனைவோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம்:

  • கிராமப்புற தொழில்முனைவோரை உருவாக்குதல்.
  • பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்.
  • தேங்காய் மட்டை கொண்டு வருமானத்தை பெருக்குதல்.
  • நவீனத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் தேங்காய் நார் தொழிலை நவீனப்படுத்துதல்.
  • தேங்காய் நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் செயல்முறை தொழில்நுட்பத்தை புதுப்பித்தல் மூலம் உற்பத்தித் திறன், தரம் போன்றவற்றை மேம்படுத்துவது.
  • தேங்காய் மட்டையை பயன்படுத்தி தேங்காய் நார் மற்றும் தேங்காய் நார் பொருட்களின் உற்பத்தியை அதிகபடுத்துவது.
  • கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து தென்னை நார் சார்ந்த தொழிலில் ஈர்ப்பது.

 தொழிலின் திட்ட மதிப்பு:

தொழிலுக்கான திட்ட மதிப்பு அதிகபட்சமாக ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் விண்ணபிக்கலாம். இந்த திட்டத்தில் நடைமுறை மூலதனத்தையும் (working capital) பெறலாம். இந்த நடைமுறை மூலதனம் தொழிலுக்கான திட்ட மதிப்பில் 25%-க்குள் இருக்க வேண்டும்.

 அரசு மூலதன மானியம்:

  • காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்தில் அரசு மூலம் வழங்கப்படும் மானியம் (Subsidy) தொழிலின் திட்ட மதிப்பில் 40% சதவீதம் ஆகும். அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் வரை வழங்கப்படும்.
  • தொழில் முனைவோர் சொந்த முதலீடு
  • தொழிலின் திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 5% விழுக்காட்டை பயனாளிகள் தொழிலில் முதலீடு செய்ய வேண்டும்.
  • வங்கிக் கடன்
  • வங்கி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக தொழிலின் திட்ட மதிப்பீட்டில் 55% சதவிதத்தை வங்கி கடனாக வழங்கும்.

பயனாளிகளின் தகுதிகள்:

  • 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
  • காயர் உத்யமி யோஜனா விண்ணபிக்க எந்த வித வருமான வரம்பும் கிடையாது.
  • தென்னை நார் சம்மந்தமான பொருட்கள் உற்பத்தி செய்யபவர்களுக்கு மட்டும் காயர் உத்யமி யோஜனா திட்டம் பொருந்தும்.
  • தனிநபர்கள், சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புடன் கூடிய நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
  • விண்ணப்பிக்க வேண்டிய அரசு அலுவலகங்கள்
  • காயர் உத்யமி யோஜனா திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கயிறு வாரியம் மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்களில் விண்ணபிக்கலாம்.

கடனுதவி அளிக்கும் நிறுவனங்கள்:

காயர் உத்யமி யோஜனா திட்டத்தில் தேர்ந்தேடுக்கப்படுபவர்கள் வங்கிகள் (Banks) மூலம் கடனுதவி பெற பரிந்துரைக்கப்படுவர்.

காயர் உத்யமி யோஜனா (COIR UDYAMI YOJANA) திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிற தகுதிகள்:

சாதி சான்றிதழ் – சாதி சார்ந்த தொழில் சிறப்பு பிரிவினற்கான கடன் வசதி பெரும் போது.

கடன்:

  • கட்டிடம் மற்றும் எந்திரங்களின் மதிப்பிற்கு மட்டும் தரப்படும்.
  • ஒரு சுழற்சி மூலதன கடன் பெறலாம். அது மொத்த திட்ட மதிப்பில் 25% மிகாமல் இருக்க வேண்டும். இந்த நடைமுறை மூலதனத்தை வங்கிகள் தொழில் ஆரம்ப காலங்களில் கொடுக்கலாம். இதற்கு எந்தவித மானியமும் கிடையாது. நடைமுறை மூலதனம் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.
  • நிலம் கட்டிடம் பெற்று உள்ளவர்களுக்கு எந்திர மதிப்பே திட்டத்தின் மதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கே இந்த திட்டம் செயல்படும்.
  • இந்த திட்டத்தை செயல்படுத்துவது கயிறு வாரியம். இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது மேலும் மாநிலங்களில் உள்ள கிளை நிலையங்களையும் அணுகலாம். மாவட்ட தொழில் மையங்களும் இதற்கு உதவிகள் செய்யும்.

கடன் பெற பயனாளிகள் வங்கியில் சென்று கடன் பெறுவதற்கான அனுமதி பெற்று இருத்தல் அவசியம். பயனாளிகள் குறிப்பிடும் வங்கிகளுக்கு இந்த மானிய உதவி அளிக்கப்படும்.

வங்கிகள் இந்த விண்ணப்பங்களை பெற்ற பின் 60 நாட்களுக்குள் வாரியத்திடம் இந்த திட்டத்தில் கடன் பெற தகுதியானவரா மற்றும் தகுதியற்ற நிலை ஏற்பட்டால் அதற்கான காரணத்துடன் பதில் அளிக்க வேண்டும்.

வங்கிகள் திட்ட மதிப்பில் 95% கடன் அளிக்க வேண்டும். பயனாளிகள் 5% கொண்டு வர வேண்டும். இதற்கான வட்டி வங்கிகளின் திட்டங்களுக்கு உட்பட்டது. திரும்ப செலுத்தும் காலம் 7 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

இந்த கடன் முழுவதும் மத்திய அரசின் கிரிடிட் கேரண்டி டிரஸ்ட் பண்ட் திட்டத்தில் வருவதால் வங்கிகள் எந்தவித சொத்து பிணையம் தனிநபர் உத்திரவாதம் கேட்க கூடாது.

முதலில் விண்ணப்பிக்கும் பயனாளிக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெறுதல் அவசியம். இப்பயிற்சியினை தொழில் ஆரம்பிக்கும் முன்போ அல்லது கடன் பெற்ற உடனையோ பெற்று கொள்ளலாம்.

பயனாளிகளின் விண்ணப்பங்களை கயிறு வாரியத்தின் அதிகாரி சரி பார்த்து அதை போர்டு உறுப்பினர்களுக்கு அளிப்பார். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு போர்டு சிபாரிசு செய்யும்.

பயனாளிகள் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?

பயனாளிகள் கடன் உறுதி செய்யபட்ட உடன் வங்கிகள் பயனாளிகளின் திட்ட அறிக்கையை ஆய்வு செய்து அவர்களுக்கு அளிக்க வேண்டிய மானியத்தை கணக்கிட்டு வாரியத்திடம் அளிக்க வேண்டும். வாரியம் இந்த மானியத்தை எல்லா நடைமுறைகள் சரியாக இருப்பின் 30 நாட்களுக்குள் வங்கிக்கு பயனாளியின் மானியத் தொகையை அளிக்கும்.

வங்கிகள் மானியத் தொகையை பெற்று 30 நாட்களுக்குள் பயனாளிக்கு கடன் வழங்க வேண்டும். மானியங்கள் அதிகமாக பெறப்பட்டு இருந்தால் கடன் தொகை பெற்ற பின் அதிகமான மானியத் தொகையை திரும்ப தர வேண்டும்.

இந்த திட்டம் கடன் பெற்று 6 மாதத்திற்குள் முடிவு பெற்று இறுத்தல் அவசியம்.

பயனாளியிடம் விண்ணப்பங்கள் பெற்ற பின் இந்த விண்ணப்பங்களின் நிலை பற்றி வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். இ-டிராக்கிங் சிஸ்டம் மூலம் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் கண்காணிக்கலாம்.

பயனாளிகள் தங்கள் பங்குத் தொகையினை 30 நாட்களுக்குள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களுடன் இணைக்கபட வேண்டிய இணைப்புகள்:

  • முழுவதும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
  • தொழில் துவங்க இருக்கும் இடத்தின் பத்திர நகல்
  • உங்களுக்கு கயிறு தொழில் தெரியும் என்பதற்கான அனுபவ சான்று
  • கயிறு வாரியத்திடம் பெற்ற பயிற்சி சான்று
  • எந்திரங்களின் விலைபட்டியல்
  • கட்டிடத்தின் வரைபடம் மற்றும் அதன் மதிப்பிடு
  • திட்ட அறிக்கை
  • எஸ்சி/ எஸ்.டி என்றால் அதற்கான ஜாதி சான்றிதல்
  • ஏதாவது வங்கியின் பரிந்துரை கடிதம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உங்கள் ஏரியாவை பொறுத்து தேர்வு செய்யவும். தமிழகத்தில் விண்ணபிக்க,

COIR BOARD REGIONAL OFFICE

DOOR NO.103, VALLALAR STREET

VENKATESHA COLONY, POLLACHI-642001

TEL/FAX: 04259-222450.

இந்த திட்டத்தில் இப்போது ஆன்லைனிலும் விண்ணபிக்கலாம். அதற்கான இணையதள முகவரி http://www.coirservices.gov.in/frm_login.aspx

உங்கள் திட்ட மதிப்பிடு 10 லட்சத்திற்கு அதிகமானால் நீங்கள் மாற்று திட்டத்தின் மூலம் விண்ணபிக்கலாம்.

இதற்கான மாற்று திட்டம்: (Development of Production Infrastructure Scheme):

மேலும் தொழில் துவங்க மற்றும் உங்கள் தொழிலை புதுமையான எந்திரங்களில் மாற்றியமைக்க உங்களுக்கு 10 லட்சம் மேல் கடன் பெற தேவையெனில் உங்களுக்கு சிறப்பு திட்டம் உள்ளது. அதன்படி நீங்கள் Development of Production Infrastructure Scheme –ல் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் உங்களுக்கு 25% மானியம் பெறலாம். அதிகபட்சமாக 6 லட்சம் வரை  மானியம் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் இப்போது ஆன்லைனிலும் விண்ணபிக்கலாம். அதற்கான இணையதள முகவரி http://www.coirservices.gov.in/frm_login.aspx

திட்ட அறிக்கை என்றால் என்ன?

திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை எப்படி செய்வது? அந்த தொழில் லாபகரமான தொழிலா? அந்த தொழிலின் சந்தை வாய்ப்பு எப்படி உள்ளது? அந்த தொழில் துவங்க தேவையான எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்னென்ன? அந்த எந்திரங்களின் விலை என்ன? தொழில் எங்கு ஆரம்பிக்க போகின்றிர்கள்? சொந்த இடமா அல்லது வாடகை இடமா?வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தம் அவசியம். உற்பத்தி செய்யும் முறை, விற்பனை விபரம், மூலப்பொருட்கள் விபரம், பணியாட்கள் விபரம், மின்சார தேவை, மாத மின் செலவு,பணியாள் சம்பள விபரம், உப பொருட்கள் மற்றும் பாக்கிங் செலவு, விற்பனை செலவு மற்றும் தேய்மான செலவு என அனைத்து விபரங்களும் அதில் அடங்க வேண்டும்.

மேலும் இந்த செலவுகள் போக மீதம் வரும் லாபம், லாபத்தில் இருந்து எப்படி வங்கி கடன் கட்டுவீர்கள் எத்தனை தவணையில் கட்டுவீர்கள், எவ்வளவு வட்டி போன்ற விபரங்களும் அடங்கும்.

பெரிய கடனுக்கு சமநிலை உற்பத்தி திறன் Break Even Point, உற்பத்தி செலவு வருட அட்டவணை Profitability Statement பின் பண செலவு செய்யும் முறை, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை Balance Sheet இவை அனைத்தும் திட்ட அறிக்கையில் இருக்க வேண்டும்.

திட்ட அறிக்கை தெளிவாகவும், சரியாகவும் புரியும் படியும் இருந்தால் தொழில் தொடங்க வங்கிகளும் எளிதில் கடன் கொடுப்பார்கள்.

          











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here