தனக்கென ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த ஜாம்பவான் இன்று ஓய்வு பெறுகிறார்!
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜாக் மா. இன்று ஆன்லைன் வணிக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கும் அலிபாபா நிறுவனத்தை 1999-ம் ஆண்டு 17 பேருடன் தொடங்கினார் இவர். அந்த 17 பேர் யார் தெரியுமா?…அனைவருமே இவரின் மாணவர்கள்தான். ஆம், இப்படி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உண்டாக்குவதற்குமுன் இவர் ஒரு ஆசிரியர்.

சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு மிகப்பெரியது. சீனாவில் பலரும் டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்யத் தொடங்கியது இவரால்தான். சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கிய இவரின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். இந்தியாவில் முகேஷ் அம்பானி எப்படியோ அப்படிதான் சீனாவிற்கு ஜாக் மா. ஆனால் ஆசிரியராக இருந்து இந்த இடத்திற்கு உயர்ந்ததால் புதிதாக தொழில் முனைய விரும்பும் சீன மாணவர்களுக்கு இவர்தான் ரோல் மாடல். இவர் புகைப்படத்தை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை கூட சீனாவில் உண்டு.
இப்படியான ஜாம்பவான், அலிபாபாவின் 20-ம் ஆண்டு நிறைவையொட்டி இன்று ஓய்வுபெறுகிறார். இன்றைய தினத்துக்கு மற்ற சிறப்புகளும் உண்டு. இன்றைய தினம்தான் சீனாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜாக் மாவின் பிறந்த தினமும் இன்றுதான்.
‘996 Vs 669!’ – ஊழியர்களுக்கு ஜாக் மா வழங்கிய அறிவுரை!
அவர் எடுத்திருக்கும் இந்த ஓய்வும் அலிபாபா நிறுவனத்திலிருந்து மட்டும்தான். ஆங்கில ஆசிரியராக இருந்த ஜாக் மா தற்போது மீண்டும் கல்வித் துறைக்கே செல்லவிருக்கிறார். அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகினாலும், 6.22 சதவிகித பங்குகளை வைத்திருப்பதால் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் தொடர்வார். நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் ஜாக் மாவின் தலையீடு இருக்கும். கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த ஜாக் மா, நியூ யார்க் டைம்ஸிற்கு பேட்டியளித்திருந்தார்.
55 வயதாகும் ஜாக் மா, மீண்டும் கல்வித் துறைக்கே திரும்புவதில் பில்கேட்ஸுக்கும் பங்கு உண்டு. ‘பில்கேட்ஸ் கல்வி மேம்பாட்டுக்காக முழுவீச்சில் செயல்பட்டவர். அவர் செய்த தொழில்நுட்ப சாதனைகளை என்றுமே நான் தொட முடியாது. ஆனால், ஒரு விஷயத்தில் அவரைவிட நான் முந்திவிட்டேன்.
`நான் விரைவில் ஓய்வு பெறப்போகிறேன். என் ஓய்வு ஒரு முடிவாக இருக்காது, அது ஒரு ஆரம்பமாக இருக்கும். நான் மீண்டும் கல்விப்பணியில் ஈடுபடப்போகிறேன். எனக்கு மிகவும் பிடித்த பணியும் அதுவே’
ஜாக் மா

பில்கேட்ஸ் 58 வயதில் ஓய்வு பெற்று, அறக்கட்டளை நிறுவினார். நான் இப்போதே 55 வயதில் ஓய்வுபெற்று அவரின் வழியில் கல்வி மேம்பாட்டுக்காக என் வாழ்நாளைச் செலவிடுவேன்’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் ஜாக் மா. 2014-ம் ஆண்டே ஜாக் மா அறக்கட்டளை தொடங்கி கல்வி மற்றும் பிற உதவிகளைச் செய்துவருகிறார்.
ஃபேர்வெல் ஜாக் மா!
- https://www.vikatan.com/