உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்

0
994

நம் எல்லோரையும் வசியப்படுத்தி அவரின் தாக்கத்தில் நம்மை பயித்தியமாக்கியவர். உலகின் பலகோடி மக்களை அவரின் இணையத்தளத்திலே கட்டிப் போட்டவர். அவர்தான் Facebook-ஐ தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg). தனது கனவிற்காக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். 2004-ஆம் ஆண்டு ஒரு தூங்கும் அறையில் தொடங்கப்பட்ட Facebook இன்று பல பேரை தூங்கவிடாமல் செய்துவிட்டது. கையில் எதுவுமின்றி எப்படி கோடிகளையும், புகழையும் சம்பாதித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் நமக்கெல்லாம் எழுச்சியூட்டும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.

1  கனவு காணுங்கள் (Have a Dream)

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) பெற்ற வெற்றி ஒரு நாள் இரவில் கிடைத்த வெற்றியில்லை. அவரின் வெற்றி பயணம் அவர் கண்ட கனவிலிருந்து ஆரம்பமானது. அவருக்கு உலகத்தை இணைக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அவர் கண்ட கனவே இன்று Facebook மூலம் நம் எல்லோரையும் இணைத்திருக்கிறது. கனவே எல்லா வெற்றிக்கும் மூல காரணம். நம் சாதிக்க விரும்பினாலும், புகழ்பெற வேண்டுமானாலும் நாம் காணும் கனவே நம்மை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

2  பெரியதாக நினையுங்கள் (Think Big)

நாம்  கல்லூரியில் ப்ராஜக்ட் செய்திருப்போம். அதை நாம் மதிப்பெண் பெறுவதற்காவும், கல்லூரியின் கட்டாயத்தாலும் செய்வோமே தவிர அதை தாண்டி ஒரு பெரிய திட்டம் நமக்கு இருப்பதில்லை. ஏனென்றால் நமக்கு தேவை மதிப்பெண்களே, வெற்றிகள் இல்லை. மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) கல்லூரியில் ஒரு ப்ராஜக்ட் போலத்தான் Facebook-ஐ ஆரம்பித்தார். ஆனால் அவர் அதை கல்லூரிக்கு மட்டும் செய்யப்பட்ட ஒரு ப்ராஜக்டாக பார்க்கவில்லை. அதை தாண்டி உலகத்தை இணைக்க கூடிய ஒரு திட்டமாகவே Facebook-ஐ பார்த்தார்.

சிறிது வளர்ச்சி அடைந்தபோதே Yahoo, AOL போன்ற நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்க தயாராயிருந்தன. ஆனால் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) Facebook-ஐ விற்க மறுத்துவிட்டார். ஏனென்றால் உலக மக்கள் அனைவரையும் இணைக்க முடியும் என்ற எண்ணம், திட்டம், கனவு பெரியதாக அவருக்கு இருந்தது.

எல்லோரும் Facebook-ஐ மில்லியன் டாலர் நிறுவனமாக பார்த்தபோது, மார்க் ஜுக்கர்பெர்க் அதை பல பில்லியன் டாலர் நிறுவனமாக பார்த்தார்.

நாம் நம்மை, நம் கனவை, நம் திட்டத்தை மிகப் பெரியதாக நினைக்க வேண்டும். நாம் எந்த அளவிற்கு எண்ணுகிறோமோ அந்த அளவிற்கே அடைகிறோம்.

 

3  சிறியதிலிருந்து தொடங்கு (Start Small)

 

பேஸ்புக்
     

மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு மிகப் பெரிய கனவு, வியத்தகு திட்டம் இருந்தது. Facebook-ஐ உலகளாவிய திட்டமாகவும், பல பில்லியன் டாலர் நிறுவனமாகவும் பார்த்தார். இருந்தாலும் Facebook-ஐ சிறியதாகவே தொடங்கினார். அவர் தங்கியிருந்த அறையிலேயே மிகக் குறைந்தபட்ச முதலீட்டுடன், அதிகபட்ச வியர்வையுடன் தொடங்கினார்.அதற்காக அவர் ஊக்கம் இழக்கவில்லை. அதை இகழ்வாகவும் நினைக்கவில்லை. பல கோடி முதலீட்டிற்காக Facebook-ஐ தயார்படுத்தினார். தூங்கும் அறையிலிருந்து தொடங்கப்பட்ட Facebook இன்று பல பேரை தூக்கம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது.

நாம் நமது நிறுவனம், தொழில் சிறியதாக தொடங்கப்பட்டதற்கு வெட்கப்பட கூடாது, இகழ்வாக கருதகூடாது. கனவு, உழைப்பு, எண்ணம், செயல் பெரியதாக இருக்கும்பட்சத்தில் நாமும் பெரிய இடத்தை அடைந்தே தீருவோம்.

4  உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் (Believe In Yourself)

மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு அவர் மீதும், Facebook மீதும் முழு நம்பிக்கை வைத்தார். Facebook-ன் முலம் உலக மக்களை இணைக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் மீதும், Facebook மீதும் வைத்த நம்பிக்கையை மார்க் ஜுக்கர்பெர்க் ஒருபோதும் இழந்ததில்லை.

நாம் நம் மீது முழு நம்பிக்கை வைக்கவேண்டும். எல்லா திறமைகளும் நமக்குள் இருக்கின்றன. நாம் நம்மை உறுதியாக நம்பவேண்டும். நமது நம்பிக்கையை இழக்கவைக்கும்படியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும்.பல நேரங்களில் நம் திறமையின் மீதும், உழைப்பின் மீதும், முயற்சியின் மீதும் சந்தேகம் வரும்படியான சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். எந்த தருணத்திலும் நம் மீது வைத்த நம்பிக்கையை இழக்ககூடாது.

5  உங்களுக்கு தீவிர விருப்பம் இருக்கும் விஷயத்தை பின்பற்றுங்கள் (Follow Your Passion)

மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு சிறுவயதிலிருந்தே கணினி புரோகிராமில் (programming) பேரார்வம், தீவிர காதல் இருந்தது. அவர் சிறுவயதிலே பல மென்பொருட்களை உருவாக்கினார். அவர் புரோகிராமில் இருந்த விருப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அவருக்கு கணினி புரோகிராமில் இருந்த தீவிர காதலே அவரை Facbook-ஐ உருவாக்க தூண்டியது.

நம்மில் பல பேர் வெற்றியடையாததற்கு ஒரு காரணம் விருப்பம், தீவிர காதல் இல்லாத செயல்களை செய்ததால்தான். நமக்கு எதில் தீராத காதல், விருப்பம், பேரார்வம் இருக்கிறதோ அதை பின்பற்றவேண்டும். நமக்கு தீவிர விருப்பம் இருக்கும் விசயங்களிலேயே நம்மை ஈடுப்படுத்தவேண்டும்.

6  விமர்சனத்திற்கு தயாராய் இருங்கள் (Be Prepared For Criticism)

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மிக அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவற்றிற்காக அவர் ஒருபோதும் அடிபணிந்ததில்லை. தனது கனவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை.

உழைப்பினால் நாம் களைப்படைவதை விட பிறரது விமர்சனங்களால்தான் அதிகம் நொறுங்கிப் போகிறோம். ஓர் ஆழமான உண்மை என்னவெற்றால், பாராட்டைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கும் பலவீனம் நம்மிடம் உள்ளதனால்தான் விமர்சனங்களால் நாம் துவண்டுபோகிறோம்.

பிறரது அபிப்ராயங்கள், கேலி, அவமானம், கிண்டல், தாக்குதல், விமர்சனம் போன்றவை பல நேரங்களில் நாம் சந்திக்கவேண்டிவரும். அதற்காக எந்த விமர்சனத்திற்காவும் நமது குறிக்கோளிலிருந்து பின்வாங்கக் கூடாது. அதை நமது உயர்விற்கு உந்துதலாக்கி கொள்ளவேண்டும்.

7  விடாமுயற்சி செய்யுங்கள் (Be Diligent)

மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) விடாமுயற்சியுடன் உழைத்ததனால்தான் அவர் உலகின் இளைய வயது கோடிஸ்வரரானார். அவர் ஒருபோதும் தனது விடாமுயற்சியை கைவிட்டதில்லை.

வெற்றி என்ற இனிப்பை பெறுவதற்கு முன் வியர்வை என்ற உப்பை சிந்தித்தான் ஆகவேண்டும். எந்த ஒரு மனிதனும் தனது பையில் இரண்டு கைகளை விட்டுகொண்டு உயரே போகமுடியாது. எந்த வெற்றியும் எளிதாக கிடைத்து விடாது. கனவு காண்பதனால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது கடின உழைப்பும் சேர்ந்தால்தான் கிட்டும். நாம் எதை செய்கிறோமோ அதை விடாமுயற்சியுடன், கடின உழைப்புடன் செய்வோம்.

8  மிகப் பெரிய நிறுவனங்களை பார்த்து பயப்படவேண்டாம் (Don’t be afraid to dare the giants)

மார்க் ஜுக்கர்பெர்க் Facebook-ஐ இணையத்தில் முதன்மையாக்க விரும்பினார். ஆனால் ஏற்கனவே பல மிகப்பெரிய நிறுவனங்கள் இணையத்தை ஆட்சிசெய்து கொண்டிருந்தன. அதற்காக மார்க் ஜுக்கர்பெர்க் எந்த பெரிய நிறுவனங்களை பார்த்தும் பயந்ததில்லை. பெரிய நிறுவனங்களுடனும் போட்டி போட அவர் ஒருபோதும் பயந்ததில்லை.

பெரும்பாலும் நாம் நம்மை விட வலுவானவர்களையும், பேராற்றல் உள்ளவர்களையும், திறமையானவர்களையும் பார்த்து நமது தைரியத்தை இழந்துவிடுகிறோம். தைரியம் என்ற பண்பு வெற்றியாளர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும் மிக முக்கியமான பண்பாகும். நம்மை விட பேராற்றல் வாய்ந்தவர்களை பார்த்து ஒருபோதும் அஞ்சகூடாது. அவர்களை பார்த்து நமது தைரியத்தை ஒருபோதும் இழக்ககூடாது.

9  ஒரே விசயத்தில் கவனத்தை குவியுங்கள் (Be focused)

மார்க் ஜுக்கர்பெர்க் தனது கவனம் முழுவதையும் Facebook நிறுவனத்திலேயே செலுத்தினார். Facebook மூலம் உலகத்தை இணைக்கவேண்டும் என்ற ஒற்றை செயலிலேயே கவனத்தை குவித்தார். மார்க் ஜுக்கர்பெர்க் மட்டுமல்ல வெற்றிபெற்ற அனைத்து தொழில்முனைவோரும், வெற்றியாளர்களும் தங்களது ஒரு கனவிலேயே கவனத்தை செலுத்தினர்.

பலவற்றில் கவனம் குறைந்தபட்ச வெற்றியையே கொடுக்கும்; ஒருங்கிணைந்த கவனகுவிப்பே அதிகபட்ச வெற்றிகளை அளிக்கின்றது. நமது கனவு எதுவோ, நமது விருப்பம் எதுவோ அவற்றிலே நமது முழுகவனத்தை செலுத்துவோம்.

10  துணிகர முடிவை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள் (Learn To Take Risk)

மார்க் ஜுக்கர்பெர்க் Facebook-க்கில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொள்ள கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தும் முடிவை எடுத்தார்.  அவர் அப்போது அந்த முடிவை எடுத்திருக்கவில்லை என்றால் Facebook இத்தனை வளர்ச்சி பெற்றிருக்காது.

துணிகர முயற்சியை  எடுக்காமல் யாரும் எந்த வெற்றியையும் பெற்றுவிட முடியாது. நாம் எடுக்கும் துணிகர முயற்சியே நம் வெற்றிக்கு வழிவகுக்கும். துணிகர முயற்சியை எடுத்து  போராடவேண்டும். ஜெயித்தால் சந்தோஷம், தோற்றால் அனுபவம் – இரண்டுமே விலைமதிக்க முடியாத சொத்துக்கள்!உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here