காளிமார்க் கம்பெனி வரலாறு

0
1411

காளிமார்க் கம்பெனி வரலாறு

 

திண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்ட ஒரு சோடா கம்பெனியின் உரிமையாளர், சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் நடந்த கூட்டத்தில் ஒரு தகவலை சொன்னார்.
அது நாம் அனைவரும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. எப்படி அன்னிய நாட்டு பானங்கள் நம் குளிர்பானச் சந்தையை கபளீகரம் செய்தது என்பதை புரிந்து கொள்ள, அவர் சொன்னை தகவல் உதவும் என நம்புகிறேன்…
ஆங்கில திரைப்படமும் அயல்நாட்டு குளிர்பானமும்
அவர் சொன்ன தகவலின் சாரம் இதுதான். “எனக்கு சொந்தமாக ஒரு திரையரங்கம் இருக்கிறது. அங்கு இடைவேளையில், எங்கள் கம்பெனி குளிர்பானங்களை விற்பனைக்கு வைப்பது எங்கள் வழக்கம்.

 

ஆங்கில் படங்கள் இந்தியாவில் பரவலாக ரீலீஸ் செய்யப்பட துவங்கிய காலம் அது. நாங்களும் எங்கள் திரையரங்கத்தில், ஒரு முறை ஒரு பிரபல ஆங்கில படத்தை திரையிட முடிவு செய்தோம். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். படம் திரையிடப்பட்டது.
அன்றும் வழக்கம் போல் இடைவெளியில், எங்கள் கம்பெனி குளிர்பானத்தை விற்பனைக்கு வைக்க எத்தனித்த போது, அந்த ஆங்கில படத்தை ரிலீஸ் செய்த கம்பெனி, அதை தடுத்தது. நாங்கள் எங்கள் சரக்குகளை விற்பனைக்கு வைக்க கூடாது என்றது.
அதாவது, அந்த திரைப்பட ஒப்பந்தத்தின் படி, நாங்கள் உள்நாட்டு பானங்களை விற்பனைக்கு வைக்க கூடாதாம். அவர்கள் சொல்லும் பானத்தைதான் விற்பனைக்கு வைக்க வேண்டுமாம்…”.
இப்படியாகதான் நம் சந்தையை கொஞ்சம், கொஞ்சமாக அந்திய நாட்டு பானங்கள் கைப்பற்றியது.
அதிக மூலதனத்துடன் சந்தைக்கு வரும் அந்நிய குளிர்பானங்கள் விற்பனையாளர்களுக்கு, குளிர்சாதனப்பெட்டி கொடுத்தது. அந்த குளிர்சாதனப்பெட்டியில், அவர்களின் பானத்தை தவிர வேறு பானங்களை வைக்க கூடாது என்றது.
ஜில்லென்று குளிர்பானம் கேட்கும் தன் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து அவர்கள் நீட்டும் காகிதத்தில் எல்லாம் விற்பனையாளர்கள் கையெழுத்திட்டார்கள்.
அவர்கள் போல் பெரும் மூலதனம் இல்லாததால், நம் உள்நாட்டு குளிர்பான நிறுவனங்களால், அவர்கள் போல் குளிர்சாதனப்பெட்டி தர முடியவில்லை. இப்படியாக நம் கடைகளை விட்டு நம் பானங்கள் வெளியேறியது. மன்னிக்கவும். வெளியேற்றப்பட்டது.

 

நூறாண்டுகள் தாண்டி களத்தில் இருக்கும் காளிமார்க்:
இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், நம் உள்நாட்டு பானமான ‘காளிமார்க்’ வெற்றிகரமாக தன் நூற்றாண்டை கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆம். இது நம் பெரும்பாலானோரின் விருப்பமானதாக இருக்கும் பவண்டோ குளிர்பானத்தின் தாய் நிறுவனமான காளிமார்க்கின் நூற்றாண்டு.
இந்த நூறாவது ஆண்டில், அது வெற்றிகரமாக ரூ.150 கோடி மதிப்பீட்டில், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில், 11 ஏக்கர் பரப்பளவில் தனது புதிய ஆலையை நிறுவ உள்ளது. “கர்நாடக, ஆந்திர சந்தையை மனதில் வைத்து இந்த ஆலையை நிறுவுகிறோம்.
இந்த ஆலை 2017 ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை துவங்கும். அது மட்டுமல்லாமல் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, ’வைப்ரோ’ என்னும் புது பிராண்டை அறிமுகப்படுத்த உள்ளோம்” என்று கூறியுள்ளார் காளிமார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தனுஷ்கோடி.
நிச்சயம். இது பெருமையான தருணம்தான். ஒரு தமிழக நிறுவனம், இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், தன் சுயத்தை இழக்காமல், நூறாண்டுகளாக சந்தையில் இருப்பது நமக்கு பெருமைதான். முதலில் அவர்களுக்கு நம் வாழ்த்துகளை சொல்லிவிடுவோம்.
உள்நாட்டில் தயாரிப்பதால் மட்டும் அது சுதேசி பானம் ஆகிவிடுமா…?
நான் வெளிநாட்டு பானங்கள் குடிப்பதில்லை, உள்நாட்டு மட்டுமே குடிப்பவன். நண்பன் ஒரு முறை கேட்டான், “நீ ஏன் வெளிநாட்டு பானங்கள் குடிப்பதில்லை..?” என்று. அதற்கு நான், “அவர்கள் நம் இயற்கை வளங்களை சுரண்டுகிறார்கள். அதனால்தான்…” என்றேன்.
“பின்னே என்ன.. இவர்கள் மட்டும் H2O (தண்ணீர்) வை தங்கள் தொழிற்சாலையிலா தயாரிக்கிறார்கள்…. நம் நாட்டுகாரன் மட்டும் நம் வளத்தை சுரண்டலாமா…?” என்றான்.

 

அவன் விளையாட்டாகதான் சொன்னான். ஆனால், அதில் இருந்த பெரும் உண்மை உறுத்தியது. சுரண்டலுக்காக நாம் வைத்திருக்கும் அளவுகோல் தான் என்ன…?
‘விதாண்டாவதம் பேசாதீர்கள். நம் உள்நாட்டு நிறுவனம் உலகை ஆள்வது நமக்கு பெருமைதானே…ஏன் எல்லாவற்றிலும் எதிர்மறையாக யோசிக்கிறீர்கள்…?” என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.
நிச்சயம் விதாண்டாவதம் இல்லை. நான் அரசியலில் மட்டும் இல்லை, இது போன்ற தயாரிப்புகளிலும் ஜனநாயகமும், பரவலாக்கமும் வேண்டும் என்கிறேன்.
அதாவது, ஒரு காளிமார்க் மட்டும் இல்லாமல், ஊருக்கு ஒரு காளிமார்க் வேண்டும் என்கிறேன். அந்தந்த பகுதி வளம், அந்தந்த பகுதி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்கிறேன்.
புரியவில்லையா…?
சரி. தெளிவாக சொல்கிறேன். நம் தமிழக நிறுவனம் ஒன்று பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து, வறுமையில் இருக்கும் ஏதாவது ஒரு ஆப்பிரிக்கா நாட்டில் கிளை பரப்பி உள்நாட்டு தயாரிப்புகளை சிதைத்து,
மொத்த சந்தையையும் கைப்பற்றினால் நாம் சந்தோஷமாக ஏற்றுகொள்வோம் என்றால், அயல் நாட்டு நிறுவனங்கள் நம் சந்தையை கைப்பற்றியதையும் நாம் சந்தோஷமாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

சரி, வளர்ச்சி எப்படிதான் இருக்க வேண்டும்….?
நேர் கோடாக இருக்க கூடாது. கிடைமட்டமாக இருக்க வேண்டும். அதாவது, வளர்ச்சியும், செல்வமும் பரவ வேண்டும். ஊருக்கு ஒரு ‘Brand’ இருக்க வேண்டும். அப்படிதான் முன்பு இருந்தது,
தஞ்சையில் கிடைக்கும் குளிர்பானம், மதுரையில் கிடைக்காது, திருநெல்வேலியில் இருப்பது சென்னையில் கிடைக்காது. அதாவது ஏகப்பட்ட நிறுவனங்கள். இதில் உள்ள நன்மை என்னவென்றால் தண்ணீர் அதிக அளவில் சுரண்டுவது தடுக்கப்படும். அந்தந்த பகுதி வளங்கள் அந்தந்த பகுதியில் நுகரப்படும்.
உள்ளூர் பகுதி மக்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும். இடம்பெயர்தல் தடுக்கப்படும். இப்படி தயாரிக்கப்படும் பானமே உண்மையான சுதேசி பானமாக இருக்கும். இதுவே உண்மையான ‘Make in India’வாகவும் இருக்கும்.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here