சாலையோர சாணக்கியர்கள் நமக்கு கற்றுத் தரும் 10 தொழில் பாடங்கள்!

0
1202

சாணக்கியன் இன்றைய உலகில் யார் என்று கேட்டால், மெத்தப்படித்து நாலைந்து டிகிரி முடித்து கைகளில் ஆப்பிள் மடிக்கணினி வைத்திருப்பவர்கள் என்று பொதுவாக கூற இயலும். ஆனால் சில சமயங்களில் படித்தவர்களை விடவும் அனுபவம் வாய்ந்தவர்கள் சாணக்கியனாக மாறி, வாழ்க்கைp பாடங்களை நமக்கு புகட்டுவது உண்டு. இம்முறை சாலையோரத்தில் சாட் கடை வைத்திருப்பவர் இந்தியா பின்பற்ற வேண்டிய சில முக்கிய பாடங்களை நமக்கு கூறுகிறார்.

இந்திய தொழில்துறையின் பண்பு என்னவென்றால், இப்படித்தான், இதுதான் வெற்றியின் பாதை என எவருமே வகுக்க இயலாது. வெற்றிக்கு படிக்கட்டுகள் இங்கு உண்டு ஆனால் அனைவரும் அதில் கஷ்டப்பட்டு ஏறித்தான் உச்சியை அடைய இயலும். கீழ் இருந்து ஏறி அமர்ந்தவுடன் மேலே அழைத்துச் செல்லும் ’வின்ச்’ இங்கில்லை.

என்ன வேண்டும் உங்களுக்கு? அனைத்தும் கிடைக்கும் இந்தியாவின் தொழில் உலகில். “ஆர்டர் இன் கேயாஸ்” என ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதைப்போன்று கூச்சல் குழப்பங்களுக்கு நடுவே மிக சாதாரணமாக அசாதாரண ஒப்பந்தங்கள் நிகழும். எனவே இங்கு வெற்றிக்கு என்ன தான் வழி?

’ஸ்டிராட்டஜி’ அதாவது ’யுக்தி’ ஒவ்வொரு பெருநிறுவன கூட்டங்களிலும் அடுத்த 6 மாதம் அடுத்த 1 வருடம் நமது நிறுவனம் செல்ல வேண்டிய பாதை இதுதான் என இந்த வார்த்தையை பயன்படுத்துவர். ஆனால் குளிர்ச்சியூட்டப்பட்ட அறைகளை தாண்டி வெயிலிலும் மழையிலும் வாடினாலும் வாடிக்கையாளரை மீண்டும் மீண்டும் வர வைக்கும் சாதுர்யம் வாய்ந்த சில கடைக்காரர்கள் இன்று அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை கூறுகிறார்கள்.

அவர்கள் கூறும் பாடங்கள் சில நேரங்களில் தொழில் ரகசியங்கள் அனைத்தும் கரைத்து கைகளில் கொடுக்கும் கல்லூரிகளில் கூட கிடைக்காது. தொழில் செய்தே ஆக வேண்டும். இல்லை என்றால் இன்று வாழ்க்கை இல்லை என்ற சாதாரணமான, ஆனால் பசியை மையமாகக் கொண்ட உலக தத்துவமே இவர்களை எப்படியாவது அவர்கள் தொழிலில் வெற்றி அடையச் செய்கிறது.

ஒவ்வொரு தெருவிலும் சர்வசாதாரணமாக நாம் காணும் ஒருவர் சாட் கடைக்காரர். அவரிடம் இருக்கும் பொருட்கள் அன்றாடம் நமது வீடுகளில் எப்போதும் நாம் உபயோகிக்கும் பொருட்களே. ஆனால் அவற்றின் மூலம் அவர் நிகழ்த்தும் தொழில் புரட்சி, ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டியது.  அவரிடமிருந்து பெருநிறுவனங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன.

1. அனைத்தும் ஒரே இடத்தில் – ஒழுங்கான முறையில் :

சாட் கடைகளை காணும் பொழுது அவை எப்படி உள்ளன என்பதை கவனித்து பாருங்கள். அவர்களுக்கு என்ன வேண்டும்? அவை எந்த முறையில் வேண்டும் என அனைத்தும் அத்துபடியாக தெரியும். அதற்கு ஏற்றவாறு சட்னியில் இருந்து, கடைசியாக தூவப்படும் ’சேவ்’ பொடி வரை அனைத்தும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒன்றோடு ஒன்று இடையூறாக இல்லாத வண்ணம். சேவ் பொடி வைக்கபட்டிருக்கும் பாத்திரத்தின் வாய் கடைகாரர் கை சுலபமாக புகும் வண்ணம் அதே சமயம் காற்று அதிகமாக பட்டு அவை நவுத்து போகாத வண்ணம் அமைந்திருக்கும்.

பாடம் : எது முதலில் தேவை. எது முடிவில் தேவை நமது தொழிலில் என்பதை தெரிந்து வைத்திருத்தல். மேலும் எதை எங்கு வைத்தால் நம்மால் லாபம் ஈட்ட இயலும் என்பதை யோசித்து முடிவு செய்வது. பின்னர் உணர்ந்தவற்றை சரியாக அதே வரிசையில் செய்து முடிப்பது. இது அனைவரும் அறிய வேண்டியது.

2. ஒருவர் தூக்கி எரியும் பொருள் உங்கள் தொழிலின் அடித்தளமாக இருக்கலாம் :

வழக்கமாக சாட் கடைகளில் பழைய செய்தித்தாள்களில் உங்களுக்கு அனைத்து உணவுகளும் வழங்கப்படுவதை காண இயலும். அவை மக்கள் வீடுகளில் படித்துவிட்டு பழைய பேப்பர்காரரிடம் கொடுப்பவை. அங்கிருந்து நேராக இவர்களிடம் வந்து சேருகின்றது. அவைதான் இடத்தை அதிகம் பிடிக்காமல், அதிக செலவில்லாமல் அதே சமயம் வாடிக்கையாளரும் சுலபமாக பற்றும் வண்ணம் இருக்கும்.

பாடம் : உங்கள் தொழிலில் தேவையான வளங்களை தேடும் பொழுது மற்றவர்கள் வேண்டாம் என தூக்கி எரியும் பொருட்கள் உங்களுக்கு தங்கம் போன்று உதவலாம். எனவே குறுகிய மனப்பான்மை அறவே கூடாது.

3. இடம் பார்த்து கடை போடவும் :

எங்கு இருந்தால் கூட்டம் எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிந்து கடை போடுவார்கள் சாட் கடைக்காரர்கள். நீங்கள் தினமும் செல்லும் சாலையில் எந்த இடத்தில் அதிக கூட்டம் இருக்கும் என்பது அவர்களுக்கு அத்துப்படி.

பாடம் : சரியான இடத்தில் உங்கள் பொருளை வைத்தால் அதை விட சிறந்த விளம்பரம் தேவை இல்லை. எப்போதும் வாடிக்கையாளர் வருவதற்கு காத்திருப்பதை விட, அவர்களுக்கு நடுவில் உங்கள் கடையை வைப்பது சிறந்த யுக்தி.

4. வாடிக்கையாளருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுப்போம் :

சாட் கடை பல இருந்தாலும் எல்லா சாட்டும் ஒரே சுவையில் இருப்பதில்லை. சாப்பிடுபவர் என்ன கேட்கின்றாரோ அதற்கு ஏற்றவாறு சாட் மாறுபடும். சில நேரங்களில் நீங்கள் கூற வேண்டுய அவசியம் இல்லை. உங்கள் முக பாவனைகள் வைத்தே காரம் குறைக்க வேண்டுமா இனிப்பு அதிகமா துவர்ப்பு வேண்டுமா என கேட்பார் அவர். நமது வீடுகளில் இதை பார்த்து பார்த்து பரிமாறுவது எனக் கூறுவோம். நீங்கள் கூறுவதை கேட்டு அடுத்த பூரி உங்களுக்கு ஏற்ற வாறு மாற்றி அமைக்கப்படும்.

பாடம்: தொழிலுக்கு ஏற்றவாறு வாடிக்கையாளர் மாறிய காலம் மலையேறிவிட்டது. அவர்களுக்கு என்ன வேண்டுமோ அவ்வாறு தொழில்கள் மாறியுள்ளன. ஆனாலும் அதில் வெற்றி பெற வாடிக்கையாளர் என்ன கேட்கின்றாரோ அதனை சிறிதும் மாறாது தருவதே வழியாகும். அடுத்தாக வாடிக்கையாளர் அனைத்து நேரங்களிலும் விமர்சனங்களை வார்த்தைகள் மூலம் தெரிவிப்பது இல்லை.

5. ஒரே நேரத்தில் ஓராயிரம் வேலைகள்:

Sign up for Newsletters Check out our popular newsletters and subscribe எவ்வளவு பூரி கொடுத்துள்ளோம், அவர்கள் என்ன சாப்பிட்டார்கள், இவர்கள் என்ன கேட்டார்கள், அடுப்பு எவ்வளவு நேரம் எறியவேண்டும்? இன்னும் எவ்வளவு நேரம் கூட்டம் வரும் இப்படி ஒரே நேரத்தில் பல விஷயங்களை மாறி மாறி கவனத்தில் வைப்பார் சாட் கடைக்காரர். அது அவருக்கு சர்வ சாதாரணமாக பழகிய ஒன்று. நாம் பழக வேண்டிய ஒன்று.

பாடம்: உங்கள் கைகளில் உள்ள வேலைகளை எவ்வளவு இலகுவாக அதே நேரம் சரியாக முடிக்கின்றீர்கள் என்பதே நீங்க வெற்றிக்கு செல்ல வேண்டிய வழியாகும். கூச்சல் குழப்பம் இருந்தாலும் அதில் ஒரு தெளிவு பிறக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமான வாடிக்கையாளரை கவனிப்பது சந்தோஷமாக இருக்க வேண்டும் சங்கடமாக அல்ல.

6. சொன்னதை மட்டுமல்ல மனது கேட்பதையும் கேட்கவேண்டும் : முன்பு போல் அல்ல தற்போது சிந்தாமல் சிதறாமல் அழகாக சாப்பிடும் வண்ணம் சாட் மாறிவிட்டது. வீட்டுக்கு பார்சல் கூட வாங்கிச் செல்லலாம். அதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டனர் கடைக்காரர்கள். நாங்களே வந்து தருகின்றோம் என தற்போது ’டோர் டெலிவரியும்’ வந்துவிட்டது.

பாடம் : எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதை விடவும், புதிதாக மாறுவது, தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்பது ஒரு தொழிலை எப்போதும் காப்பாற்றும். சில நேரங்களில் மாற்றம் தொழிலுக்கு ஏற்றமாகவும் அமையும். வாடிக்கையாளர் வேண்டுவதை அறிந்து அதனை உங்கள் ரசனையோடு இணைத்துத் தருவது தொழிலுக்கு நன்மை பயக்கும்.

7. என்ன தேவை எவ்வளவு தேவை : மாலை வேளைகளில் சாட் கடைக்காரர் வெங்காயம் வெட்டுவதையோ, உரிப்பதையோ பார்க்க இயலாது. காரணம் அந்த நேரத்தில் மேலும் இரண்டு வாடிக்கையாளரை கவனிக்க இயலும். அதன் காரணமாக வாங்குவது வெட்டுவது என அனைத்தும் மாலை வேளைக்கு முன்பே முடிந்து விடும். மேலும் இன்று எத்தனை பேர் கடையில் உண்ண வருவார்கள் என்பதும் அவருக்கு தோராயமாக தெரியும். பல நாட்களில் அது சரியாகவும் இருக்கும்.

பாடம் : டிமாண்ட் என்ன இருக்கும் என்பதை கணித்து அதற்கு ஏற்ப தேவையான பொருட்களை வாங்கிவைப்பது, மேலும் வாடிக்கையாளரை காக்கவைத்து அதன் மூலம் அவரை யோசிக்கவைப்பது கூடாது.

8. ஒன்று படு வென்று எடு :

சாட் கடைகளில் எப்போதும் ஒருவர் மட்டும் வேலை செய்வதை பார்ப்பது அரிது. 3 அல்லது 5 நபர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஒருவர் கல்லாவை பார்த்தால் இன்னொருவர் சாட் தயாரிப்பார். ஒருவர் தேவையான பொருட்களை தயாரித்தால் மற்றொருவர் வாடிக்கையாளரை கவனித்து என்ன வேண்டும் என்பதை கேட்டுவைப்பார். அவர்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் நேரம் மிகவும் குறைவு.

பாடம் :  ஒரு அணியாக வேலை செய்வது மிகவும் நன்று. வாடிக்கையாளரை சந்திக்கும் நேரங்களில் உங்க அணியில் இருக்கும் ஒற்றுமை மிகவும் முக்கியம். ஒன்றாக செயல்படும் பொழுது தவறுகள் குறையும், அதன் காரணமாக நேரம் மிச்சப்படும். ஒவ்வொருவரும் அவரது வேலைகளை அறிந்து பணியாற்றும் பொழுது, எதிர்பார்ப்பையும் தாண்டி வேலையின் தரம் உயரும்.

9. இலவச பூரியின் தனித்துவம்:

நமது சாட் கடைகளில் மிக முக்கியமாக, இலவசமாக கூடுதலாக ஒரு பூரி அல்லது சட்னியை சாப்பிடும் போதும் முடித்த பின்பும் கொடுப்பார்கள். அதன் சுவை அறியாதார் எவரும் இலர். கேட்டதை காட்டிலும் அதிகமா கொடுக்கப்படுவதால் அந்த ஒற்றை பூரி செய்யும் மாயம் அதிகம்.

பாடம் : எப்போதும் வாடிக்கையாளர் கேட்பதை காட்டிலும் அதிகமாக கொடுப்பது அவரை அடுத்த முறை அவரை மீண்டும் கடைக்கு வர வைக்கும். திருப்தியோடு கடையை விட்டு செல்லும் வாடிக்கையாளர் மீண்டும் ஒரு முறை அல்ல உரிமையோடு பல முறை வருவார். எனவே அந்த ஓற்றை இலவச பூரி போல அவர்கள் மனம் கவரும் வண்ணம் ஒரு விஷயம் இருந்தால் போதும்.

10. கொஞ்சம் சிரிங்க பாஸ் :

சாட் கடைக்காரர் எப்போதும் சிரித்த வண்ணம் இருப்பதை பார்க்க இயலும். (அடுப்பில் இருப்பவர் கடுப்பில் இருந்தால் இடுப்பை உடைப்பேன் = பகவதி விஜய்) அடுத்தவர் பசியாற சாட் பரிமாறுபவர் கோவமாக இருந்தால் அந்த சாட் சுவை சற்று குறைவாகத்தான் இருக்கும். மேலும் சிறிது சிரித்து பேசி பழக ஆரம்பித்தால் தொழில் மேலும் வளரும்.

பாடம் : வாடிக்கையாளரும் மனிதர்தான். அவர்கள் உலகம் வேறாக இருக்கும் சில நேரம். மனதில் என்ன இருந்தாலும் சிலரை பார்த்தவுடன் மனது இளகி நல்ல ஒரு சூழல் அமையும். அதுவே ஒரு உத்வேகம் தருமாறு இருக்கும். எனவே ஒவ்வொரு முறையும் சிரிப்போடு வாடிக்கையாளரை அணுகுங்கள். (இக்கட்டுரையின் மூலம் நாங்கள் சொல்ல விரும்புவது, தொழிலில் நாம் கற்றுக்கொள்ள ஆயிரம் பாடங்கள் உள்ளன. அவற்றை கற்றுத் தர எப்போதும் சாட் கடைக்காரர் போன்று ஆசிரியர்களும் தயாராக உள்ளனர். எனவே நீங்கள் கற்றுக்கொள்ள தயாராக இருந்தால் போதும்.) தமிழில்: கவுதம் தவமணி

Thanks
Read more at: https://yourstory.com/tamil











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here