வெற்றி தரும் வியாபார உத்திகள்

0
1653

உற்பத்தியும், சந்தைப்படுத்துவதும் வியாபாரத்தின் இரண்டு கண்கள். எதையும் தொடங்குவது முக்கியமல்ல. தொடர்வதுதான் முக்கியம். தொழில் தொடங்குவோருக்கு சில அடிப்படை தகுதிகள் முக்கியம்வெற்றி ரகசியம் இதுதான்.
‘உங்களிடம் அறிவு, செயல்திறன், மனப்பான்மை, நுட்பத்திறம், நல்ல பழக்கவழக்கங்கள் இருக்க வேண்டும். இவை இருந்துவிட்டால் பணம் பண்ணுவது எளிது.நீங்கள் நுால்களின் வாயிலாகக் கற்றிருந்தாலும், அனுபவத்தில் பெற்றிருந்தாலும், உங்கள் அறிவைக் கொண்டு புதிதாய் எதையேனும் கண்டறியப் பாருங்கள் அல்லது புதுமை செய்யுங்கள். ஏதாவது ஒரு வழியில் உங்கள் அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்.நல்ல மனோபாவம் நம்முடைய செயல்களுக்குத் துாண்டுகோல். குறைவாகச் சிந்திக்கிறவர் குறைவாகவே பெறுவார். அவருடைய சிந்தனை மகத்தானதாய் இருந்துவிட்டால் உயர்நிலைகளை அவர் அடைவார். நல்ல மனோபாவம் ஒரு நேர்மறையான அணுகுமுறை. நீங்கள் செயலாற்றும் வலிமை கொண்டிருப்பது மட்டும் போதாது. உங்களுக்காகச் செயல்படுகிறவர்களையும் ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றிகரமானவராய்த் திகழ முடியும்.வேலையைத் திட்டமிடுவது, திட்டமிட்டபடி வேலை செய்வது என இரண்டுமே பொருளீட்டுவதில் தேவைப்படும் திறமைகள்.சுயமாக இயங்கும் ஆற்றல், நேர மேலாண்மை, திட்டப் பரிசீலனை, நிதி சார்ந்த தகவல்களைக் கையாள்வது, விரும்பத்தக்க விதமாய் நடந்து கொள்வது, பணியாளர்களை ஊக்குவிப்பது, முடிவெடுத்தல் ஆகியவை வேண்டும்.

விற்பனை பெருக என்ன வழி

வித்தியாசம் காட்டினால் விற்பனை கூடும்.மக்கள் வித்தியாசமானவைகளை வரவேற்றுக் கொள்ளும் பண்பு உடையவர். அந்த வித்தியாசம் புதுமையாக தங்கள் ரசனைக்குப் பொருந்துவதாய் இருக்க வேண்டும் அவர்களுக்கு.இன்று இளைஞர்கள் மட்டுமின்றி ‘பெரிசு’களும் விரும்பி அணிகிற ‘ஜீன்ஸ்’ துணி அந்த நாளில் கூடாரமடிக்கப் பயன்படுத்தப்பட்டது. அந்த முரட்டுத் துணியை ஆடையாய் தயாரித்து விற்கிற திட்டம் ‘லெவி ஸ்ட்ராஸ்’ என்பவரின் மூளையில் உருவானது.ஜீன்ஸ் தயாரித்து விற்பதில் ‘லெவி’ முதலிடம் பெற்றது.’ஜீன்ஸ் உங்களைக் கவர்ச்சியாகவும், இளமையாகவும் தோற்றமளிக்கச் செய்யும்’ என்று லெவி நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் அழுத்தமாய் சொல்லியிருந்தது.அமெரிக்காவில் உணவு விடுதியில் சாப்பிட வருகிறவர்கள் தங்கள் உணவைத் தாங்களே எடுத்துச் சாப்பிடும் முறை பரவிக் கொண்டிருந்தது. அதைக்கண்ட ‘க்ளாரன் சாண்ட்ரஸ்’ என்பவருக்கு ஒரு ‘ஐடியா’ தோன்றியது. நாமும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும்படி செய்தால் என்ன! அவர் பலசரக்குக் கடையொன்றில் எழுத்தராக வேலை பார்த்தார். தமது கடை முதலாளியிடம் அந்த யோசனையைத் தெரிவித்தார். ஆனால், முதலாளி புதிய முறையை ஏற்க மறுத்துவிட்டார்.’இந்த ஐடியாவை எப்படியும்தாம் செயல்படுத்தியே தீர வேண்டும்’ என்கிற ஆர்வம் சாண்ட்ரஸிற்கு. அவர் பல்வேறு வழிகளில் முயன்று தாமே சொந்தமாய் ஒரு பல்பொருள் அங்காடியைத் தொடங்கினார். கடையின் பெயர் ‘பிக்கி – விக்கி’.வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பொருள்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் முறையை அவர் நடைமுறைப்படுத்தினார். அந்தப் புதிய முறை மக்களைப் பெரிதும் கவர்ந்தது. கூட்டம் பெருகியது. வியாபாரம் அதிகரித்தது. சாண்டர்ஸ் சீக்கிரமே பெரிய பணக்காரராகிவிட்டார்.உங்களுக்குத் தோன்றுகிற புதிய யோசனைகளை, புதுமைகளை உங்கள் நிறுவனத்தில் சோதித்துப் பார்க்கலாமே.

சந்தைப்படுத்துதல்

ஆய்வு செய்தலும், சந்தைப்படுத்துதலும் நீங்கள் தேடிக்கொள்ள வேண்டிய திறமைகள். இந்த இரண்டு திறமையும் இருந்தால்தான் தொழிலில் வெற்றி.உங்கள் தயாரிப்புகள் யாரிடம் போய்ச் சேர்கிறது. அவற்றை எப்படி அவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதை சந்தை ஆய்வின் மூலம் கண்டறியுங்கள். சந்தை ஆய்வும், சந்தைப்படுத்துதல் என்கிற இரண்டு திறன்களும் இருந்துவிட்டால் புதிய தொழில்முனைவோர் நிச்சயம் வெற்றி பெறுவார். நல்ல பொருள்களுக்கு எங்கும், எப்போதுமே வரவேற்பு இருக்கும். மக்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் பொருட்களை உற்பத்தி செய்யுங்கள். அவர்கள் விரும்பி வாங்குகிறவைகளையே விற்பனை செய்யுங்கள்.சந்தைப்படுத்துவதில் வித்தியாசமான சிந்தனை இருக்க வேண்டும். மொத்தமாகப் பணம் கொடுத்துத்தான் பொருட்களை வாங்க முடியும் என்ற நிலையிருந்த அந்த நாளில், தவணை முறையில் பணம் செலுத்திப் பொருளை வாங்கலாம் என்ற புதிய உத்தியைக் கையாண்டுதான் வி.ஜி.பி நிறுவனத்தார் வெற்றி பெற்றனர்.ஒரு சுவையான செய்தி. குன்றின் மேல் இருந்த புத்த மடாலயத்தின் அடிவாரத்தில் ஒரு பல்பொருள் அங்காடியிருந்தது. என்னென்ன பொருட்களை வாங்கி வைக்கலாம் என்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்ல தலைவாரிக் கொள்ளும் சீப்பு வாங்கி வைக்கலாம் என்று ஒருவர் சொன்னார். எல்லோரும் சிரித்தார்கள். புத்தத் துறவிகள் மொட்டையடித்துக் கொள்வார்கள். சீப்பு தேவைப்படாதே என்றனர். ஆலோசனை சொன்னவர் விடவில்லை. புத்த துறவிகளைத் தரிசிக்க வருகிறவர்களுக்கு தலைமுடி இருக்குமே அவர்கள் வாங்கலாமே என்றார். கடைக்காரர் யோசிக்கத் தொடங்கினார். அதற்குள் இன்னொருவர் அற்புதமான யோசனை சொன்னார். தினம் தினம் நிறைய பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு சீப்பின் அடிப்புறத்திலும் புத்தரின் பொன்மொழியைப் பொறித்து விட்டால் நிறையபேர் வாங்குவார்கள் என்றார். அந்த ஏற்பாட்டுக்கு நல்ல பலன் கிடைத்தது.

விற்கும் தந்திரம்

ஒரு பொருளை மலிவாக வாங்கிவிட்டோம் என்பது உபயோகிப்பாளர்களுக்கு திருப்தியைக் கொடுக்கும். தள்ளுபடி, ஒன்றுக்கொன்று இனாம் என்பதெல்லாம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.ஒரு நகரத்தில் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ஆட்கள் நுழையும் வாசல் அருகே நின்ற ஒருவர், தலையில் வைக்கும் குல்லாவை ஐம்பது ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார். சிலர்தான் வாங்கினார்கள். பொருட்காட்சி முடிந்து வெளியேறும் இடத்தில் நின்ற ஒருவர் அதே குல்லாவை நாற்பது ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்ததால் நிறைய பேர் வாங்கினார்கள். பத்து ரூபாய் மிச்சப்படுத்திவிட்டோம் என்ற திருப்தி அவர்களுக்கு. தொப்பிகளை விற்ற இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள், சொல்லி வைத்துத்தான் இப்படி விற்றார்கள். தொப்பியின் உண்மை விலை இருபது ரூபாய்தான் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவா போகிறது.

அணுகுமுறை

வீட்டு உபயோகப் பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து, விற்பனைப் பையன்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விற்கும் உத்தியை ஒருவர் கையாண்டார். பத்து பேர் கொண்ட அந்தக் குழுவில் ஒருவனின் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. ஒருவன் அதிகப்படியான பொருட்களை விற்பனை செய்திருந்தான். குறைவாக விற்பனை செய்தவனிடம் முதலாளி காரணம் கேட்டபோது நாய்தான் காரணம் என்றான். எப்படி?“பல வீடுகளில் நாய் வளர்க்கிறார்கள். நாய் என்றால் எனக்குப் பயம். அந்த வீடுகளுக்குப் போக மாட்டேன். நாய்கள் இல்லாத வீடுகளாகப் பார்த்துத்தான் வியாபாரம் செய்வேன். அதனால்தான் இந்தக் குறைவான விற்பனை”.அதிகமான பொருட்களை விற்றவனிடம் அதன் ரகசியத்தை மற்றவர்களுக்கு சொல்லும்படி முதலாளி கேட்டுக் கொண்டார். அவனும் நாய்தான் காரணம் என்றான். எப்படி?நான் ஒரு வீட்டுக்குப் போனால் அங்கே நாய் குரைத்துக் கொண்டு வரும். நான் பயந்து ஓடாமல் சில பிஸ்கட்டுகளை வீசுவேன். அது உண்ணத் தொடங்கும். சில நாட்கள் இப்படிச் செய்ததும் என்னைக் கண்டதும் குலைக்காமல் என்னருகில் வரும். அன்போடு தடவிக் கொடுப்பேன். இதைக் கண்டதும் வீட்டு உரிமையாளர் வெளியே வந்து என்னைப் பாராட்டுவார். என்ன வேலை செய்கிறாய் என்று கேட்பார். விற்பனைப் பொருட்களைக் காட்டுவேன். நிறையப் பொருட்களை வாங்கிவிடுவார்கள்”.ஒருவருக்கு பிரச்னையாக இருக்கும் நாய், இன்னொருவருக்கு வாய்ப்பாக அமையும் விந்தை இதுதான். அணுகுமுறைதான் முக்கியம்.முனைவர் இளசை சுந்தரம்பேச்சாளர், மதுரை 98430 62817

  • Dinamalar


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here