வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்

0
201

வாய்ப்புகள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் ஒருவகை. வாய்ப்புகள் வந்தாலும் சரியாகப் பயன்படுத்தத் தெரியாதவர்கள் ஒருவகை. வாய்ப்பு வந்திருக்கிறது என்பதையே உணராமல் இருப்பவர்கள் ஒருவகை.வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்பவர்கள் ஒருவகை. இந்த நான்காவது வகையைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் வெற்றியாளர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

 

கண்டுபிடிப்பு

டைனமோ என்ற கருவியைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பாரடே. உயர்கல்வி கற்ற அவருக்கு அதிக வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் விஞ்ஞான மனப்பான்மை அவருள் பதியமிட்டிருந்தது. ஆனால் விஞ்ஞானப் புத்தகங்கள் படிக்கக் கிடைக்கவில்லை. புத்தகங்களை பைண்டிங் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதையே வாய்ப்பாக உருவாக்கிக் கொண்டார். அங்கு வருகின்ற விஞ்ஞானப் புத்தகங்களைப் படித்து குறிப்பெடுத்துக் கொள்வார். அவர் காலத்தில் சிறந்த விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் ஹம்ரி டேவி என்பவர். அவரது உதவியாளராக ஆகவேண்டும் என விரும்பினார். அதற்கு என்ன செய்வது?

ஹம்ரி டேவி சொற்பொழிவாற்றும் இடங்களுக்கெல்லாம் சென்று சொற்பொழிவை குறிப்பெடுப்பார். அவைகளையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக உருவாக்கி ஹம்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். அதைப் படித்துப் பார்த்த ஹம்ரி மகிழ்ச்சி அடைந்தார். மைக்கேல் பாரடேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். “உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது. நீங்கள் எனது உதவியாளராகச் சேர முடியுமா?” பாரடே ஆனந்தம் அடைந்தார். இந்த வாய்ப்புக்காகத்தானே அவர் ஏங்கிக் கொண்டிருந்தார்! பிறகு அவரது ஒத்துழைப்போடு பெரிய விஞ்ஞானி ஆனார். இப்படித்தான் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

பரதநாட்டியம்

பரதநாட்டியக் கலையில் சாதனை படைத்து வந்தார் ஒரு பெண்மணி. அவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் அவள் நாட்டியமாடுவாள் என்ற உறுதியை மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுத்தான் திருமணம் நடந்தது. மாப்பிள்ளையும் பரதநாட்டிய ரசிகர்தான். ஆனால் திருமணமான சில மாதங்களில் மனைவி நடனமாடுவதற்கு கணவன் தடைவிதித்தார். காரணம் கேட்டபோது அவர் சொன்னது : “அரங்கத்தில் எனது மனைவி நாட்டியமாடும்போது மற்றவர்களோடு அமர்ந்து நானும் நடனத்தைப் பார்ப்பேன். என் அருகில் இருந்த ஆண்கள் அவளது நடனத்தை மட்டும் ரசிக்காமல், அவளது உடல்வாகை ரசித்து அசிங்கமான கமெண்ட்ஸ் அடித்தார்கள். இதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவேதான் பலபேர் முன்னிலையில் அவள் ஆடுவதற்குத் தடைவிதித்தேன்”.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நடனப் பெண்மணி என்ன செய்வார்? அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டிலேயே ஒரு நாட்டியப் பள்ளியைத் தொடங்கி பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்பினார். கணவனிடம் அனுமதி கேட்டார். கணவனும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இப்போது அவளது நாட்டிய ஆர்வத்துக்கு பிரச்னையில்லை. அடுத்த தலைமுறையை உருவாக்கும் வாய்ப்பாக அதை மாற்றிக் கொண்டார்.

 

வேலைவாய்ப்பு

ஒரு கம்பெனி ஐந்து உதவியாளர்கள் தேவை என்று விளம்பரம் செய்தது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய தேதியையும் அறிவித்திருந்தது. ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள். ஓர் இளைஞன் தாமதமாகத்தான் விளம்பரத்தைப் பார்த்தான். அவசர அவசரமாக அந்தக் கம்பெனியை நோக்கி ஓடினான். அவன் செல்வதற்கு முன் நேரம் முடிந்து சில நிமிடங்கள் ஆகியிருந்தன. மேனேஜரை அணுகியபோது இனிமேல் விண்ணப்பங்களைப் பெறமாட்டோம் என்று சொல்லிவிட்டார். ஆனால் அந்த இளைஞன் தலைவிதி இவ்வளவுதான் என்று கிளம்பவில்லை.

“ஐயா, என்னை மன்னிக்க வேண்டும். எனது ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். அவனது பணிவைக் கண்ட மேனேஜர் “என்ன?” என்றார். “ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கும். அவையெல்லாம் எப்படி பிராசஸ் பண்ணப் போறீங்க?” என்று கேட்டான் அந்த இளைஞன். “அதுதான் இப்போதுள்ள பிரச்னை. எல்லா விண்ணப்பங்களையும் வகைப்படுத்த வேண்டும். எல்லோருக்கும் நேர்முகத் தேர்வுக்குக் கடிதங்கள் அனுப்ப வேண்டும்” என்றார் மேனேஜர்.

“இதற்கெல்லாம் உங்களுக்கு உதவி செய்ய பணியாளர் தேவைப்படுமே. அந்த தற்காலிக வேலையை எனக்குக் கொடுங்கள். தேர்வு வேலைகள் முடிந்தவுடன் நான் சென்றுவிடுகிறேன். எனது வறுமை நிலைக்கு கொஞ்ச நாளாவது வேலை கிடைத்த மாதிரி இருக்கும்” என்று கூறிய அவனை உற்றுப் பார்த்தார் மேனேஜர். உன் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். அந்த வேலையை உனக்குத் தருகிறேன். உனது விவரம் அடங்கிய விண்ணப்பத்தைக் கொடு என்று வாங்கிக் கொண்டார் மேனேஜர்.

நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் தன்னுடைய தற்காலிக வேலையை விட்டுப் புறப்பட ஆரம்பித்தான் அந்த இளைஞன். மேனேஜர் அவனைத் தடுத்து “நான்கு பேர்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். ஐந்தாவது ஆள் நீதான். உன்னைப் போன்ற ஆர்வமுள்ள ஆள்தான் எங்களுக்குத் தேவை” என்று அப்பாயின்மென்ட் ஆர்டரைக் கொடுத்தார். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதில் இது ஒருவகை.

 

தற்கொலையைத் தடுத்த வாய்ப்பு

வாழ்க்கையில் தோல்விகளையே கண்டு துவண்டு போன ஒருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்விட முடிவு செய்தார். அதை நிறைவேற்ற முயற்சித்த சில வினாடிகளுக்கு முன்பு ஹலோ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார். ஒரு பணக்காரத் தம்பதி கையில் இன்ஸ்டன்ட் கேமராவுடன் அவரை அணுகி பல படங்களை எடுத்துவிட்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து அருவியின் முன்னால் இருப்பதைப் போல ஒரு படம் எடுத்துத்தர முடியுமா? என்று கேட்டனர். போட்டோ எடுக்கும் பழக்கம் இருந்ததால் அவரும் போட்டோ எடுத்துக் கொடுத்தார். மகிழ்ந்த அந்தத்தம்பதி அவருக்குப் பத்து டாலர் பரிசாக வழங்கியது. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு கேமரா வாங்கினார். விரும்பியவர்களுக்கு படம் எடுத்துக் கொடுத்தார். வருமானம் வரத் தொடங்கியது. பிறகென்ன புதிய வாழ்க்கை தொடங்கியது.

 

உண்மையான சம்பவம்


ஒரு வேடிக்கையான ஆனால் உண்மையான சம்பவம். ஒரு நிறுவனம் கேரளாவிலிருந்து ஜெர்மனிக்குத் தென்னை நார் கயிறை ஏற்றுமதி செய்தபோது எடை கூடுவதற்காகக் கடல் மணலில் ஒரு புரட்டு புரட்டி எடுத்து அனுப்பினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படி மணல், ஜெர்மனியில் மலைபோல் குவிந்தது. ஜெர்மானியர்கள் இதைத் துாக்கி எறியவில்லை. ‘மணல் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கிறதே’ என்று ஆராய்ந்தார்கள். அதில் தோரியம் என்ற உலோகம் இருப்பது தெரிய வந்தது. உடனே கேரளாவுக்கு எழுதினார்கள், “நீங்கள் கயிறுடன் இனி மணலை அனுப்ப வேண்டாம். மணலை மட்டுமே அனுப்புங்கள்” என்று. ஜெர்மானியருக்கு மணல் ஒரு பிரச்னையாக இருந்தது. ஒரு பிரச்னையை எப்படி அருமையான சந்தர்ப்பமாக, வாய்ப்பாக மாற்றுகிறார்கள் என்று கவனியுங்கள்.
-முனைவர் இளசை சுந்தரம், வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்,மதுரை. 98430 62817

 

-DinamalarLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here