குவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் குவால்காம் 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த தலைமுறை இணைய சேவையை வழங்குவதை சாத்தியப்படுத்தும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய குவால்காம் திட்டமிட்டு உள்ளது.
இத்துடன் உலகம் முழுக்க பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் நீண்ட கால கூட்டணியை வைத்துக் கொள்ளும் நோக்கில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது.

இதன் மூலம் இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட இரு நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கின்றன. குவால்காம் கீநோட் உரையின் போது ரிலையன்ஸ் ஜியோ 5ஜிஎன்ஆர் சொல்யூஷனில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தது.
5ஜி தொழில்நுட்பத்தில் பயனர்கள் அதிவேக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகங்களை சீராக அனுபவிக்க முடியும். மேலும் இதன் மூலம் IoT சாதனங்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களில் சீரான இணைப்பை பெறலாம்.