நல்ல எண்ணங்களை விதைப்போம்!

0
1153

வாழ்வின் மாபெரும் ரகசியம் ஈர்ப்பு விதி தான். ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே கவர்ந்திழுக்கும் என்பது தான், ஈர்ப்பு விதி. நாம் ஓர் எண்ணத்தை எண்ணும் போது அதை சார்ந்த ஒத்த எண்ணங்களால் ஈர்க்கப்படுகின்றோம். ஈர்ப்புவிதி நாம் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அதை அப்படியே நமக்கு திருப்பிக் கொடுக்கும். இயற்கை விதிதான் ஈர்ப்பு விதி. மனிதராகிய நாம் ஒரு சிருஷ்டிகர்த்தா. ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நாம் விரும்புவதை நமது வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ள முடியும். மாபெரும் ஆசான்களும், அவதாரப்புருஷர்களும் எண்ணற்ற வடிவங்களில் இருக்கும் படைப்புச் செயல்முறைகளை, பல கதைகளாக உருவாக்கி, நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளனர். இவை பல நுாற்றாண்டுகளாகப் பயணித்து நம்மிடத்தில் வாழ்வியல் உண்மைகளை உணர்த்தி உள்ளது. படைப்பு விதியாகிய ஈர்ப்பு விதி, நம் எண்ணத்திலிருந்தது உதித்தது தான் என்று இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.
எண்ண அலைகளின் காந்த சக்தி

நாம் ஓர் எண்ணத்தை எண்ணுகின்ற பொழுது அதனையொத்த, எண்ணங்கள் நம்மிடையே கவர்ந்து இழுக்கப்படுகிறது. எண்ணங்களுக்கு காந்த சக்தி இருக்கிறது. அதற்கு குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு. நாம் சிந்திக்கும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன. அவை அதே அலைவரிசையில் இருக்கும் அதனை ஒத்த அனைத்து விஷயங்களையும் காந்தமென இழுத்து திரும்பவும் நம்மிடத்தில் கொண்டு சேர்க்கின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். கடல் அலைகள் மேலே ஆர்ப்பரிக்கும். ஆனால் அதே கடலின் ஆழத்தில் எவ்வித சலனமும் இருக்காது. கடலின் மேலே நுரை தான் கிடைக்கும். ஆழ்கடலில் விலைமதிக்க முடியாத முத்தும் பவளமும் கிடைக்கும். எந்த எண்ணங்கள் நம் உள் மனதை தன்பால் கவர்ந்து தொடுகின்றதோ, எந்த எண்ணத்தை நம்முடைய உள் மனம் முற்றிலும் நம்பி திரும்பத் திரும்ப எண்ணுகின்றதோ, அந்த எண்ணங்கள்தான் உருப்பெரும்.வெளிமனத்தால் மட்டும் எண்ணப்படும் எண்ணங்களால் எத்தனை தடவை திரும்பத் திரும்ப எண்ணப்பட்டாலும், அவை செயலாக உருவாகாது. திரும்ப திரும்ப ஓர் எண்ணத்தை நாம் முழுமனத்துடனும், நம்பிக்கையுடனும் எண்ணி வந்தால் அது அவசியம் திடம்பெற்று உருவாகிவிடும்.

புதைந்த சக்தி

நம் எண்ணங்களில் அதீதமான சக்தி புதைந்து கிடக்கிறது. நாம் நல்ல எண்ணங்களை வலுப்படுத்தினால் அது மாபெரும் சக்தியாகப் பரிணமித்து நல்ல வழியைக்காட்டும். நம்முடைய வாழ்க்கையை உருவாக்கும் கருவி நம் மனதில் உதிக்கும் எண்ணங்கள் தாம். நம்முடைய நிகழ்கால எண்ணங்கள் வருங்கால வாழ்வை உருவாக்குகின்றன. எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அல்லது அதிகமாகக் கவனம் செலுத்துகின்றீர்களோ அவை வாழ்க்கையாக உங்கள் கண்முன் விரியும்.ஒரு செடியானது விதையில் இருந்து முளைப்பது போன்று நம்முடைய எண்ணத்தில் இருந்து தான் ஒவ்வொரு செயலும் உண்டாகிறது. உதாரணம்: காந்திஜியின் வாழ்க்கை வரலாறு. நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் சுயராஜ்ய இயக்கத்தை ஆரம்பித்தபோது அனைவரும் எள்ளி நகையாடினார்கள்.உப்பு சத்தியாகிரகத்தின் மூலம் வெள்ளைக்காரனை துரத்துவது எப்படி? என்றார்கள்.ஆனால் காந்திஜி எண்ணத்தில் ‘பல கட்டங்கள் துன்பங்கள் நேரலாம். ஆனால் கடைசியில் வெற்றி நம்முடையதுதான்” என்று தீர்மானமான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு கடைசியில் வெற்றியும் கண்டார்.நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். அப்போது ஈர்ப்பு விதியும் நம்முடைய ஒவ்வொரு ஆணையையும் நிறைவேற்றும்.

திட்டமிடுதல்
ஈர்ப்பு விதியை சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள, நம்முடைய எண்ணங்கள் மூலமாக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் முன் கூட்டி திட்டமிட வேண்டும். நாள் தோறும் அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்ததும், அமைதியான நிலையில் அமர்ந்து அன்று நாம் செய்ய போவதில் வெற்றி பெறுவோம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். அதனையே திரும்ப திரும்ப சற்றுநேரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவு படுக்கைக்குப் போகும் போதும் படுக்கையில் அமர்ந்து மறுநாள் நாம் ஈடுபடப்போகும் விஷயத்தை நினைத்து எண்ணிக்கொண்டே சில நிமிடங்கள் இருத்தல் வேண்டும்.அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ விரும்பியபடி அமையவில்லை என்றால் அதை அழித்து விட்டு, நாம் எப்படி திகழவேண்டும் என்று விரும்பியிருந்தோமோ, மறுநாள் அந்த எண்ணத்தை மனதில் மாற்றி ஓடவிட வேண்டும்.
இரண்டு வகை எண்ணங்கள்
அபூர்வமான எண்ணங்கள் எல்லாம் நம்மைச்சுற்றிலும் வியாபித்துள்ள வெளியிலிருந்துதான் கிடைக்கின்றன என்று விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் சொல்லுகிறார். எண்ணங்கள் உறுதியாக இருந்தால் எதை நாம் எண்ணுகிறோமோ அதை சாதித்துவிட முடியும் என்பது வள்ளுவரின் வாக்கு.நல்ல எண்ணங்களை, நம்பிக்கை எண்ணங்களை, மகிழ்ச்சி எண்ணங்களை, எண்ணி வாழ்ந்தால் வளமான வாழ்வு பெறலாம். இதனையே திரும்ப திரும்ப எண்ணுகின்ற எண்ணம் ஏற்பட்டால் அவை உடனே உழைப்பைக் கொடுக்கும். ஊக்கத்தைக் கொடுக்கும்.பிரபஞ்சமானது எண்ணத்திலிருந்து பிறக்கிறது. நாம் நமது தலைவிதியை மட்டும் நிர்ணயிப்பதில்லை. பிரபஞ்சத்தின் தலைவிதியையும் சேர்த்து நிர்ணயிக்கிறோம். நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு உள்ளவர்கள். அனைவரும் ஒன்றே. நமது சக்தி நம்முடைய எண்ணத்தில்தான் உள்ளது. அதனால் விழிப்புடன் இருங்கள். நினைவில் நல்ல எண்ணங்களை வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

இரு துருவங்கள்

மனிதனின் எண்ணங்களின் தன்மையை ஆராய்ந்தபோது அது மின்சார தன்மைக்கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மின்சாரம், காந்தம் முதலிய சக்திகளுக்கு ரிணம் (Negative) தணம் (Postitive) என இருதுருவங்கள். மாற்றுத்துருவங்கள் ஒன்றையொன்று கவரும். இதனால் மின்சார ஓட்டம் உண்டாகிறது. மன அலைகள் மின்சக்தி தன்மை கொண்டவை. எனவே இரு துருவங்கள் இருக்க வேண்டும். ஆனால் நினைப்புத் துருவங்களின் முறை மின் துருவங்களுக்கு மாறுபட்டவை. “சமத்துருவங்கள் கவர்ந்தும் மாற்றுத் துருவங்கள் எதிர்த்தும்” செயல்படுகின்றன. நல்ல எண்ணங்கள் உள்ளோர் நல்ல எண்ணமுடையோரையும், கெட்ட எண்ணமுடையோர், கெட்ட எண்ணமுடையோரையும் சென்று சேர்கின்றனர். இதனையே ஆன்றோர், ‘கற்றாரைக்கற்றாரே காமுறுவர்” என்றனர் போலும்.எண்ணங்கள் சக்தி மிக்கவை. அவை சென்று சேருமிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணங்களின் பின்னணியில் மனம் இருக்கிறது.

மனம் கட்டுப்படும்

“மனம் அழிந்தால் எண்ணங்கள் அழியும்”. மனம் சுயேச்சைப்போக்கு கொண்டது. அது எவ்விதமாகவும் எண்ணும், எங்கும் செல்லும், எதையும் செய்யும். எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள்; மனம் கட்டுப்படும் மனதை நெறிப்படுத்துங்கள்; எண்ணங்கள் நெறிப்படும். நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். கெட்ட எண்ணங்களை நசுக்கிப்போடுங்கள். நல்ல எண்ணத்தின் சக்தி நல்ல எண்ணங்களை உங்கள் பால் ஈர்க்கும். இறைவ னுக்கு வெகு சமீபமாய் உங்களைக் கொண்டு சேர்க்கும்.நல்ல எண்ணத்தை விதைத்தால், நல்ல செயலை அறுவடை செய்வாய். நல்ல செயலை விதைத்தால், நல்ல பழக்கத்தை அறுவடை செய்வாய். நல்ல பழக்கத்தை விதைத்தால், நல்ல குணத்தை அறுவடை செய்வாய்.நல்ல குணத்தை விதைத்தால், நல்ல விதியை அறுவடை செய்வாய்.- சு.மைதிலி, எழுத்தாளர்மதுரை. 98425 84933











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here